சுற்றுலா சென்றுவிட்டு வீடு திரும்பிய இளைஞர்கள் பரிதாபமாக பலி!!

19

மஹியங்கனை – பொலன்னறுவை பிரதான வீதியின் ஹொபரியாவ சந்திக்கு அருகில் இடம்பெற்ற கோர விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக கிரந்துருகோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 7ஆம் திகதி மாலை 6 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் தெஹியத்தகண்டிய, சந்தனகம பகுதியை சேர்ந்த 25 வயதுடைய தேவிந்த பிரபாஷ்வர மற்றும் 21 வயதுடைய கௌஷிக மனோஜ் ஆகிய நண்பர்களே உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த இருவரும் அதே பகுதியை சேர்ந்த நெருங்கிய நண்பர்கள் எனத் தெரியவந்துள்ளது.

குறித்த இளைஞர்கள் இருவரும் நுவரெலியாவிற்கு சுற்றுலா சென்றுவிட்டு, மீண்டும் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இதன்போது மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்திலிருந்த மரமொன்றில் மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.