நாய்க்குட்டியின் நகம் கீறியதால் பரிதாபமாக பலியான பெண்!!

8

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள சில்லாங்குளம் கிராமத்தில் வளர்ப்பு நாய்க்குட்டியின் நகம் கீறியதால் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கூலித் தொழிலாளியான முருகனின் மனைவி சுமதி (47) என்பவர், உடல்நலம் பாதிக்கப்பட்ட தனது நாய்க்குட்டியைச் சிகிச்சைக்காகத் தூக்கிச் சென்றபோது அவரது தோளில் நகம் பட்டுக் கீறல் ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே தடுப்பூசி போடப்பட்ட நாய்க்குட்டிதானே என்ற நம்பிக்கையில் அவர் இதனைப் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை.

ஆனால் கடந்த சில தினங்களாக அவருக்கு உடல்நலம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுத் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு ‘ரேபிஸ்’ நோய் தொற்று இருப்பதை உறுதி செய்தனர்.

நிலைமை கவலைக்கிடமானதால் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே சுமதி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் வளர்ப்புப் பிராணிகள் வைத்திருப்போர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுமதியின் உடல் அவரது சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்ட நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவரது உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.

செல்லப் பிராணிகள் கடித்தாலோ அல்லது சிறிய அளவில் கீறல் ஏற்பட்டாலோ அலட்சியம் காட்டாமல் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற்றுத் தடுப்பூசி போடுவதன் அவசியத்தை இச்சம்பவம் உணர்த்தியுள்ளது. முறையான விழிப்புணர்வு இல்லாததால் ஒரு உயிர் பறிபோனது அப்பகுதி மக்களிடையே மிகுந்த மனவேதனையை அளித்துள்ளது.