தந்தை கேட்ட ஒரு கேள்வி : 15 வயது மாணவி எடுத்த விபரீத முடிவு!!

496

ஒரு சிறிய கண்டிப்பு அல்லது எதிர்பாராத கோபம் எப்படி ஒரு பிஞ்சு உயிரைப் பறிக்கும் என்பதற்குச் சாட்சியாக, ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே குருவரெட்டியூரில் ஒரு சோகச் சம்பவம் அரங்கேறியுள்ளது.

தந்தையின் கண்டிப்பால் மனமுடைந்த 15 வயது மாணவி, தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்தப் பகுதியையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

குருவரெட்டியூர் பகுதியைச் சேர்ந்த வீராசாமி – பத்மா தம்பதியினருக்கு மவுனிகா (15) என்ற இளைய மகள் இருந்தார்.

சம்பவத்தன்று தந்தை வீராசாமிக்கு முதுகில் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அருகில் இருந்த தனது மகள் மவுனிகாவிடம் முதுகைச் சொரிந்து விடுமாறு அவர் கேட்டுள்ளார்.

அப்போது, மவுனிகா தனது தந்தையின் முதுகில் ஓங்கி அடித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் வலியால் துடித்த வீராசாமி, “எதுக்காக இவ்வளவு ஓங்கி அடிக்கிறாய்?” எனக் கேட்டு மகளைச் சற்றுக் கடுமையாகத் திட்டியுள்ளார்.

தந்தை அனைவர் முன்னிலையிலும் தன்னைத் திட்டியதை மவுனிகாவால் தாங்கிக்கொள்ள முடியவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால் மிகுந்த மனவேதனை அடைந்த அவர், யாரிடமும் பேசாமல் தனது படுக்கையறைக்குள் சென்று கதவை உட்புறமாகத் தாழிட்டுக் கொண்டார். நீண்ட நேரமாகியும் அவர் வெளியே வராததால் சந்தேகமடைந்த குடும்பத்தினர், கதவை உடைத்துப் பார்த்தபோது அதிர்ச்சியில் உறைந்தனர்.

மவுனிகா தனது சேலையால் மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றிருந்தார். உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

ஆனால், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். தகவலறிந்து வந்த அம்மாபேட்டை போலீசார், மவுனிகாவின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், தந்தையின் கண்டிப்பு மட்டும்தான் காரணமா அல்லது வேறு ஏதேனும் மன அழுத்தத்தில் மாணவி இருந்தாரா என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரு சிறிய குடும்பத் தகராறு, ஒரு இளம் உயிரைப் பறித்திருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.