
இலங்கையின் 19 மாவட்டங்களில் இன்று புதன்கிழமை வெப்பச் சுட்டெண் சாதாரணமாக உணரப்படும் வெப்பநிலையை விட அதிகரித்து காணப்படும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் ‘அம்பர்’ நிற எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள விசேட அறிக்கையில் முக்கியமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- “வடக்கு, வடமத்திய, வடமேற்கு, மேல், தெற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுடன் மொனராகலை மாவட்டமும் இந்த வெப்ப எச்சரிக்கைக்குள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
மனித உடலில் உணரப்படும் வெப்பத்தின் அளவானது, காற்றின் ஈரப்பதம் மற்றும் நிலவும் வெப்பநிலையை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படுகையில், இன்று பல இடங்களில் இது ‘அவதானம்’ செலுத்த வேண்டிய மட்டத்தில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சுகாதார அமைச்சுடன் இணைந்து வளிமண்டலவியல் திணைக்களம் பாதுகாப்பு ஆலோசனைகளை வழங்கியுள்ளது. நீர் அருந்துதல்: உடலில் நீர்ச்சத்துக் குறையாமல் இருக்க அடிக்கடி போதிய அளவு நீர் அருந்த வேண்டும்.
நிழலான இடங்கள்: வெளிப்புற வேலைகளில் ஈடுபடுபவர்கள் அவ்வப்போது நிழலான இடங்களில் ஓய்வெடுக்க வேண்டும். வெளிப்புறச் செயல்பாடுகள்: கடுமையான உடல் உழைப்பு தேவைப்படும் வெளிப்புற வேலைகளைக் குறைத்துக் கொள்ளவும்.
முதியோர் மற்றும் நோயாளிகள்: முதியவர்கள் மற்றும் உடல்நலக் குறைபாடு உள்ளவர்கள் குறித்து கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
குழந்தைகள்: குழந்தைகளை மூடிய வாகனங்களுக்குள் தனியாக விட்டுச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
உடை: வெப்பத்தின் தாக்கத்தைக் குறைக்க மெல்லிய மற்றும் வெளிர் நிறத்திலான ஆடைகளை அணியப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
உலகளாவிய வானிலை முன்னறிவிப்பு மாதிரிகளின் அடிப்படையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.





