வவுனியாவில் கடும் வறட்சி, குடிநீருக்கும் தட்டுப்பாடு!!

1324

Varatchi

வவுனியாவில் தொடரும் வறட்சியால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன் விவசாயம், வீட்டுத்திட்ட நடவடிக்கைகள், என்பனவும் பாதிப்படைந்துள்ளன.

வவுனியா பிரதேசத்தில் மரக்கறிச் செய்கையில் ஈடுபடுபவர்கள் வறட்சியினாலும் தென்பகுதி வியாபாரிகளாலும் பாதிப்படைந்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.

தொடர்ச்சியாக காணப்படும் கடும் வறட்சி காரணமாக நீர் நிலைகளும் கிணறுகளும் வற்றி விட்டன. இதனால் நீரின்றி தோட்டங்கள் கருகுகின்றன. தப்பி ஒட்டி நிற்கின்ற மரங்களுக்கு வாட்டர் பம் மூலமும் மின்சாரத்தையும் பயன்படுத்தி பாதுகாத்து அவற்றின் உற்பத்திகளை கொண்டு சென்று சந்தையில் கொடுக்கும் போது அதற்கு நியாயமான விலை கிடைக்கவில்லை.

மகாவலி ஆற்று நீரின் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட மரக்கறிகள் சந்தைக்கு தென் பகுதியில் இருந்து வருவதால் அவர்கள் குறைந்த விலையில் விற்கிறார்கள். அவர்களுக்கு தண்ணீர் கிடைக்கிறது. அதற்கு செலவு இல்லை. எமக்கு தான் மின்சாரம், மண்எண்ணெய் என தண்ணீர் இறைக்க ஏகப்பட்ட செலவு. அவர்களுடன் நாம் போட்டிபோட முடியாது எனத் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, இந்திய அரசின் நிதி உதவித் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள வீட்டுத் திட்டங்களை கட்டி முடிப்பதற்கும் வறட்சி காரணமாக நீரினை பெற்றுக் கொள்ள முடியாது இருப்பாதாக வவுனியா ஈஸ்வரிபுரம், மறவன்குளம், தரணிக்குளம் உள்ளிட்ட பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

வவுனியாவில் தொடரும் வறட்சி காரணமாக பல பகுதிகளில் குடி நீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன் குளங்கள் மட்டுமன்றி கிணறுகளும் வற்றிவிட்டன.

இந்த நிலையில் வீட்டு கட்டுமான வேலைகளுக்கு தேவையான நீரினை பெற்றுக் கொள்ள முடியவில்லை என்கிறனர் மக்கள். இதனால் வீடுகளை உரிய காலப்பகுதிக்குள் கட்டி முடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தமக்கு நீரினை பெற ஏதாவது வழிவகைகள் செய்து தரப்படவேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.