வவுனியாவில் 50 குடும்பங்களுக்கு குடிநீர் தொட்டிகள் வழங்கி வைப்பு!!

64

வவுனியா மாவட்டத்தில் குடிநீர் தேவையுள்ள குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் நலன்கருதி, மழைநீரை சேகரிக்கும் 5,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர் தொட்டிகள் வழங்கும் விசேட நிகழ்வு வவுனியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது

கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சரும், வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான உபாலி சமரசிங்க தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

வவுனியா மாவட்டத்தில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டிற்கு தீர்வாக, மழைநீரை முறையாகச் சேகரித்து பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் நோக்கில் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் இந்த நீர் தொட்டிகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன.

மாவட்டத்தில் கடும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் வாழும் மற்றும் நீண்டகாலமாக குடிநீர் தேவைகளுக்காக சிரமப்படும் 50 குடும்பங்கள் முதற்கட்டமாகத் தெரிவு செய்யப்பட்டு, அவர்களுக்கான நீர் தொட்டிகள் இதன்போது கையளிக்கப்பட்டன.

இந்நிகழ்வில் வவுனியா மாவட்ட செயலாளர் பி.ஏ.சரத்சந்திர உட்பட அமைச்சின் உயர்மட்ட அதிகாரிகள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

இந்த நீர் தொட்டிகள் வழங்கப்பட்டதன் மூலம், அப்பகுதி மக்களின் நீண்டகால குடிநீர் பிரச்சினைக்கு ஒரு தற்காலிகத் தீர்வு கிடைத்துள்ளதோடு, வறட்சி காலங்களில் மழைநீரைப் பாதுகாப்பாகச் சேமித்து பயன்படுத்தவும் வழிவகை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.