
கலைக்காகவே வாழ்ந்த ஒரு கலைஞரின் உயிர், அவர் நேசித்த மேடையிலேயே பிரிந்த நெகிழ்ச்சியான மற்றும் துயரமான சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது.
கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்தவர் ஷைனி (52). புகழ்பெற்ற பரதநாட்டிய கலைஞரான இவர், கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி இரவு அங்குள்ள சிரைக்கல் பகவதி அம்மன் கோயில் திருவிழா நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
விழாவின் முக்கிய அங்கமாக நடந்த பரதநாட்டிய நிகழ்ச்சியில் ஷைனி மிகுந்த ஆர்வத்துடன் நடனமாடிக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக திடீரென மேடையிலேயே மயங்கி விழுந்தார்.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த விழாக்குழுவினர் மற்றும் பொதுமக்கள், அவரை உடனடியாக மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட தீவிர சிகிச்சைப் பலனின்றி ஷைனி பரிதாபமாக உயிரிழந்தார்.
கலைப்பயணத்தின் உச்சத்தில் இருந்தபோதே மேடையிலேயே ஒரு கலைஞரின் உயிர் பிரிந்தது அந்தப் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
“அவர் ஆடிக்கொண்டிருந்த போதே தெய்வம் அவரை அழைத்துக்கொண்டது” என சக கலைஞர்கள் கண்ணீர் மல்கத் தெரிவித்துள்ளனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. இது குறித்துக் கோழிக்கோடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.




