இலங்கையில் முடிவிற்கு வரும் வங்கியொன்றின் நடவடிக்கைகள் : இன்றுடன் நிரந்தரமாக மூடப்படும் வங்கிக் கிளைகள்!!

38

இலங்கையில் தனது சில்லறை வங்கிச் செயல்பாடுகள் இன்று (30.04.2026) ​​முடிவுக்கு வரும் என HSBC வங்கி அறிவித்துள்ளது. அச்செயல்பாடுகள் நேஷன்ஸ் டிரஸ்ட் வங்கிக்கு (NTB) அதிகாரப்பூர்வமாக மாற்றப்படும் என்றும் குறித்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் உள்ள HSBC வங்கியின் சில்லறை வங்கிச் செயல்பாடுகளைக் கையகப்படுத்துவதற்கான ஒப்புதலை நேஷன்ஸ் டிரஸ்ட் வங்கி, டிசம்பர் 2025இல் இலங்கை மத்திய வங்கியிடமிருந்து பெற்றது. இதற்கான கட்டாய விற்பனை மற்றும் கொள்முதல் ஒப்பந்தம் (BSA) செப்டம்பர் 2025இல் இரு தரப்பினருக்கும் இடையே கையெழுத்தானது.

இந்த நிலையில் மே 1, 2026 முதல், முதன்மை வாடிக்கையாளர்கள், கடன் அட்டைகள் மற்றும் தனிநபர் கடன்கள் உட்பட 200,000க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர் தளம் நேஷன்ஸ் டிரஸ்ட் வங்கியின் கீழ் வரும் என தெரியவருகிறது.

அதன்படி HSBC கிளைகள், ஏடிஎம்கள் மற்றும் விரைவு வங்கி மையங்கள் இன்று (30) பிற்பகல் 3:00 மணிக்கு நிரந்தரமாக மூடப்பட உள்ளன.

இணைய வங்கிச் சேவைகள், அலைபேசிச் செயலிகள் மற்றும் அட்டைப் பரிவர்த்தனைகள் இன்று மாலை 7 மணி வரை மட்டுமே செயல்படும், அதன் பிறகு அவை முடக்கப்படும் என தெரியவருகிறது.

இந்தக் கையகப்படுத்தல், நேஷன்ஸ் டிரஸ்ட் வங்கிக்கு ஒரு பெரிய வாடிக்கையாளர் தளத்துடன் தனது வணிக வலையமைப்பை விரிவுபடுத்தவும், பெருநிறுவன இலக்குகளை அடையவும் ஒரு சிறந்த வாய்ப்பை வழங்கும் என்று கூறப்படுகிறது.