வவுனியாவில் பயணிகளை நடுத்தெருவில் விட்ட 4 தனியார் பேருந்துகளின் வழியனுமதிப்பத்திரம் அதிரடியாக இரத்து!!

325

பொதுமக்களுக்கு முன்னறிவித்தலின்றி சேவையை இடைநிறுத்தி, பயணிகளை பெரும் அசௌகரியத்திற்குள்ளாக்கிய வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு தனியார் பேருந்துகளுக்கு எதிராக வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

வவுனியா பேருந்து நிலையத்தில் தமக்குரிய சுழற்சி முறை (Turn) இருந்தபோதிலும், அதிகார சபைக்கு எவ்வித முன்னறிவித்தலுமின்றி குறித்த நான்கு பேருந்துகளும் தன்னிச்சையாகச் சேவையில் இருந்து விலகிக்கொண்டன.

இதனால் பேருந்து நிலையத்தில் நீண்டநேரம் காத்திருந்த பயணிகள், தமது இருப்பிடங்களுக்குச் செல்ல முடியாமல் ஒரு நாள் முழுவதும் சொல்லொணாத் துயரத்திற்கு ஆளாகினர். இறுதியில் அதிக கட்டணம் செலுத்தி மாற்று வாகனங்களை நாட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

இந்த விதிமீறல் தொடர்பாக அதிகார சபையின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டதையடுத்து, தலைவர் பொறியியலாளர் சூ.விமலேஸ்வரன் உத்தரவின் பேரில் தண்டனைகள் விதிக்கப்பட்டுள்ளன

சம்பந்தப்பட்ட நான்கு பேருந்து உரிமையாளர்களுக்கும் தலா 3,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.மேலும் குறித்த பேருந்துகளின் வழியனுமதிப்பத்திரங்கள் 03.05.2026 வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.

இந்தத் தடைக்காலப்பகுதியில், அந்தப் பேருந்துகளில் பணிபுரிந்த சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் வடக்கு மாகாணத்தின் வேறு எந்தவொரு தனியார் பேருந்துகளிலும் பணியாற்றுவதற்கு முற்றாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் சூ.விமலேஸ்வரன், “பயணிகளின் நலனே எமது முதன்மை நோக்கம். தமக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பைத் தட்டிக்கழித்து பொதுமக்களை அலைக்கழிக்கும் இவ்வாறான செயற்பாடுகளை ஒருபோதும் சகித்துக்கொள்ள முடியாது.

இனிவரும் காலங்களிலும் இத்தகைய விதிமீறல்களில் ஈடுபடுவோருக்கு எதிராகப் பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்,” எனத் தெரிவித்தார்.