மின்கம்பத்துடன் மோதிய மோட்டார் சைக்கிள் : இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி!!

255

புத்தளம் – மதவக்குளம் வீதியில், ஆனமடுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கம்மன்தலுவ பிரதேசத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார்.

நேற்றுமுன்தினம்(03.05.2026) மாலை அதிவேகமாகப் பயணித்த பல்ஸர் ரக மோட்டார் சைக்கிள் ஒன்று, வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகில் இருந்த மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தின் வீரியம் காரணமாக மோட்டார் சைக்கிள் மின்கம்பத்தின் நடுப்பகுதியில் சிக்கி பலத்த சேதமடைந்துள்ளது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

அவருடன் பயணித்த மற்றைய இளைஞர் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக புத்தளம் ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அதிவேகமே இந்த விபத்துக்குப் பிரதான காரணம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது என்று ஆனமடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆனமடுவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.