நாட்டில் சில மாவட்டங்களில் 100 மில்லிமீட்டர் மேல் மழை : பொதுமக்களுக்கு எச்சரிக்கை!!

35

இலங்கைக்கு மேலாக வளிமண்டலத்தின் கீழ் மட்டத்தில் காணப்படும் தளம்பல் நிலை காரணமாக, நாடு முழுவதும் நிலவுகின்ற மழையுடனான வானிலை அடுத்த சில தினங்களிலும் தொடரக்கூடும் என வானிலை ஆய்வு துறை தெரிவித்துள்ளது.

இதன்படி, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 100 மில்லிமீட்டருக்கு மேல் பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காலை நேரத்திலும் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், வடக்கு, கிழக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் சில பகுதிகளிலும், ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் பகல் நேரத்தில் அதிக வெப்பநிலை உணரப்படக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே, பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடிய நிலை இருப்பதால், பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.