வெளிநாடுகளில் இருந்து இலங்கை வருவோருக்கு விடுக்கப்பட்டுள்ள கடுமையான எச்சரிக்கை!!

73

வெளிநாடுகளில் இருந்து இலங்கை வரும் நபர்கள் விசேட சோதனை நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் பத்திராஜ தெரிவித்துள்ளார்.

சைபர் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய நாடுகளிலிருந்து வருவோரே இவ்வாறு சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், சைபர் குற்றங்களுக்காக வெளிநாட்டவர்கள், ஏற்கனவே கைது செய்யப்பட்ட நாடுகளிலிருந்து வருபவர்கள் மீது மேலதிக கண்காணிப்பு முன்னெடுக்கப்படும்.

இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளின் உண்மையான நோக்கம் குறித்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து அதிகாரிகள் தீவிரமாக ஆராய்வார்கள்.

அவர்கள் சட்டபூர்வமான சுற்றுலா அல்லது அங்கீகரிக்கப்பட்ட காரணங்களுக்காகவே வருகிறார்களா என்பது உறுதி செய்யப்படும்.

விமான நிலையக் கண்காணிப்புக்கு மேலதிகமாக, ஏற்கனவே இலங்கைக்குள் தங்கியிருக்கும் சுற்றுலாப் பயணிகள் குறித்தும் பொலிஸாரும், குடிவரவு அதிகாரிகளும் தனித்தனியாகப் பரிசோதனைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதன் மூலம் சுற்றுலா விசாவைப் பயன்படுத்தி சட்டவிரோத சைபர் குற்றங்களில் ஈடுபடுபவர்களைக் கண்டறியத் திட்டமிடப்பட்டுள்ளது.

சைபர் குற்றங்களில் ஈடுபடுவது கண்டறியப்படும் எந்தவொரு வெளிநாட்டவரும் உடனடியாகக் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள்.

அதன் பின்னர் அவர்கள் இலங்கையிலிருந்து நாடுகடத்தப்படுவார்கள் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.