
மன்னாரில் கணவர் வீட்டுக்கு சென்ற மகள் மற்றும் 10 மாதம் முடிந்த பேரப்பிள்ளை இருவரும் காணாமல் போயுள்ளதாக பெண்ணின் தாய் அடம்பன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பான முறைப்பாடு நேற்று(08.05.2026) பதிவு செய்யப்பட்டுள்ளது.
மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பெரிய மடு கிராமத்தைச் சேர்ந்த றெனோயன் றெ யாழினி (வயது 18) மற்றும் அவரது 10 மாத குழந்தை ஆகிய இருவருமே காணாமல் போயுள்ளதாக குறித்த பெண்ணின் தாயார் அடம்பன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
தனது மகளின் கணவர் தனது தாய்க்கு சுகயீனம் எனக் கூறி கடந்த 2ஆம் திகதி அவரது சொந்த இடமான மட்டக்களப்பிற்கு செல்வதாக கூறி மன்னாரில் இருந்து தனது மகளையும் பேர பிள்ளையையும் அழைத்துச் சென்றுள்ளார். மன்னாரில் இருந்து வவுனியா சென்று அங்கிருந்து மட்டக்களப்பிற்கு செல்வதாக கூறியுள்ளார்.
இந்த நிலையில் மகளும் பேரப்பிள்ளையும் காணாமல் போயுள்ளனர். எனினும் தனது மருமகன் மட்டக்களப்பில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றுள்ள போதும் தனது மகளும் பேரப்பிள்ளையும் அங்கு செல்லாத நிலையில், காணாமல் போயுள்ளதாக அவர் தெரிவித்தார்.
தனது மருமகன் மட்டக்களப்பில் உள்ள அவரது தாயார் வீட்டில் இருப்பதாகவும், தொலைபேசியில் முன்னுக்கு பின் முரணான தகவலை தெரிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
மகள் மற்றும் பேரப்பிள்ளை தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள் 0775841705 மற்றும் 0776902536 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு அல்லது பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.




