
2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான விசேட மின்சாரக் கட்டணத் திருத்தம் இன்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2026 ஆம் ஆண்டின் இரண்டாம் மற்றும் மூன்றாம் காலாண்டுகளுக்கு அமைவாக, 180 அலகுகளுக்கு மேல் மின்சாரத்தைப் பயன்படுத்தும் வீட்டுப் பிரிவினரின் மின்சாரக் கட்டணத்தை 18 சதவீதத்தால் அதிகரிக்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
இது தொடர்பாக கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் கே.பி.எல். சந்திரலால், குறைந்த மின்சாரத்தை நுகர்வோருக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இந்தத் திருத்தம் அமைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், 180 அலகுகளுக்குக் குறைவாகப் பயன்படுத்தும் வீட்டுப் பிரிவினரின் மின்சாரக் கட்டணத்தில் எவ்வித மாற்றமும் செய்யப்படமாட்டாது என அந்த ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
மின் உற்பத்திச் செலவு அதிகரித்தமையால் இந்த மற்றும் அடுத்த காலாண்டுகளில் சுமார் 38 பில்லியன் ரூபாய் பற்றாக்குறை தொகை ஏற்படுகின்றமை உள்ளிட்ட மூன்று பிரதான காரணிகளை முன்னிலைப்படுத்தி மின் கட்டணத்தை 18 சதவீதத்தால் உயர்த்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 180 அலகுகளுக்குக் குறைவாக மின்சாரத்தைப் பயன்படுத்தும் சாதாரண நுகர்வோருக்கு எவ்வித கட்டண அதிகரிப்பும் ஏற்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், 180 அலகுகளுக்கு மேல் மின்சாரத்தைப் பயன்படுத்தும் நுகர்வோருக்கு சுமார் 18 சதவீதம் வரை கட்டண அதிகரிப்பு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
மேலதிக கட்டணம் அறவீடு

புதிய மதிப்பீடுகளின் அடிப்படையில், 180 முதல் 210 அலகுகள் வரை பயன்படுத்துவோருக்கு 1,760 ரூபாயும், 210 முதல் 240 அலகுகள் வரை பயன்படுத்துவோருக்கு 2,210 ரூபாயும் மேலதிகக் கட்டணமாக அறவிடப்படவுள்ளது.
அத்துடன் 270 அலகுகளுக்கு மேல் மின்சாரத்தைப் பயன்படுத்துவோருக்கு 2,600 ரூபாயும், 300 அலகுகளுக்கு மேல் பயன்படுத்துவோருக்கு 3,110 ரூபாயும் மேலதிகக் கட்டணமாக விதிக்கப்படவுள்ளதோடு, நுகர்வோர் பயன்படுத்தும் மேலதிக அலகுகளைப் பொறுத்து இத்தொகையில் மாற்றங்கள் ஏற்படக்கூடும். இதற்கமைய, அனைத்து அரச நிறுவனங்களுக்கும் 18% மின் கட்டணத்தை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா ஹோட்டல்கள்: H1 மற்றும் H2 பிரிவுகளில் குறைந்த மின் நுகர்வுக்குக் கட்டண உயர்வு இல்லை.அதிக மின் நுகர்வு காணப்படுமாயின் 18% அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சிறு மற்றும் நடுத்தர அளவிலான கைத்தொழில்களுக்குக் கட்டண அதிகரிப்பு இல்லை. பாரிய அளவிலான கைத்தொழில்களுக்கு 18% அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வழிபாட்டுத் தலங்கள்: 180 அலகுகளுக்குக் குறைவாகப் பயன்படுத்தும் வழிபாட்டுத் தலங்களுக்குக் கட்டண உயர்வு இல்லை. 180 அலகுகளுக்கு மேல் பயன்படுத்தினால் 18% அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், அரசாங்கம் 15 பில்லியன் ரூபாய் நிவாரணத்தை வழங்க எழுத்துப்பூர்வமாக இணங்கியுள்ளதால், இந்த அதிகரிப்பு 5 சதவீதமான மின் நுகர்வோரை மாத்திரமே தாக்கம் செலுத்தும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதன்படி, நாட்டின் 95 சதவீதமான மின் நுகர்வோருக்கு இந்த மின்சாரக் கட்டண அதிகரிப்பு பொருந்தாது என ஆணைக்குழு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.




