
வவுனியா செட்டிகுளம் பிரதேச சபைக்குட்பட்ட துடரிக்குளம் பகுதியில் நீண்டகாலமாகப் பற்றைகள் மண்டிப் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக இருந்த வீதி தற்போது முழுமையாகத் துப்பரவு செய்யப்பட்டுள்ளது.

செட்டிகுளம் பிரதேச சபைக்குட்பட்ட துடரிக்குளம் உள்ளக வீதி இலக்கம் 06-இன் இருமருங்கிலும் பற்றைகள் அடர்ந்து வளர்ந்து காணப்பட்டது.

இது தொடர்பாகப் பொதுமக்கள் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க, உப தவிசாளர் தேவசகாயம் சிவானந்தராசா தவிசாளரிடம் முன்வைத்த கோரிக்கையைத் தொடர்ந்து இப்பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

தவிசாளர் முகம்மது இம்தீயாஸின் உடனடி அனுமதியுடன், கனரக வாகனங்கள் மற்றும் மோட்டர் கிரேடர் (Motor Grader) இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு, வீதியின் இருமருங்கிலும் இருந்த பற்றைகள் அகற்றப்பட்டு வீதி சீரமைக்கப்பட்டது.

இந்த வீதி துப்பரவு செய்யப்பட்டதன் மூலம் இப்பகுதிப் போக்குவரத்து இலகுபடுத்தப்பட்டுள்ளதுடன், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பெரும் நிம்மதி அடைந்துள்ளனர்.





