
வவுனியா செட்டிகுளம் பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறாக வீதிகளில் திரிந்த பெருமளவிலான கட்டாக்காலி கால்நடைகள் பிரதேச சபையினால் கையகப்படுத்தப்பட்டுள்ளன.

நேற்று (10.05.2026) மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் மூலம் இந்த கால்நடைகள் பிடிக்கப்பட்டுள்ளதாக வெங்கலசெட்டிகுளம் பிரதேச சபை தவிசாளர் அறிவித்துள்ளார்.

செட்டிகுளம் , சின்னசிப்பிக்குளம், முதலியார்குளம் மற்றும் ஆனைவிழுந்தான் ஆகிய பிரதான வீதிகளில் அலைந்து திரிந்த கால்நடைகளே இவ்வாறு பிடிக்கப்பட்டுள்ளன.

இவை தற்போது சின்னசிப்பிக்குளம், ஆனைவிழுந்தான் மற்றும் வெங்கலசெட்டிகுளம் ஆகிய பிரதேச சபை வளாகங்களில் கட்டிவைக்கப்பட்டுள்ளன.

கால்நடைகளின் உரிமையாளர்கள் அவற்றுக்கான உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்து, சட்டரீதியான தண்டப்பணத்தைச் செலுத்தித் தமது கால்நடைகளை மீளப் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கால்நடைகள் உரிமையாளர்களினால் பத்து நாட்களுக்குள் மீளப் பெறப்படாவிட்டால், 1987ஆம் ஆண்டு 15ம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தின்படி அவை அரசுடமையாக்கப்படும். அவ்வாறு அரசுடமையாக்கப்படும் கால்நடைகள் பின்னர் பகிரங்க ஏலத்தின் மூலம் விற்பனை செய்யப்படும் என சபை அறிவித்துள்ளது.
மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ள விரும்பும் உரிமையாளர்கள் 024-2260914 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாகத் தொடர்புகொள்ளுமாறு பிரதேச சபையினர் தெரிவித்துள்ளனர்.




