யாழ்தேவி கடுகதி தொடருந்து சேவை மீண்டும் ஆரம்பம் : பயணிகளுக்கு வெளியான அறிவிப்பு!!

108

டித்வா புயலால் ஏற்பட்ட இடையூறுகள் மற்றும் தொடருந்து பாதை சீரமைப்பு உள்ளிட்ட காரணங்களினால் நிறுத்தப்பட்டிருந்த யாழ்தேவி கடுகதி தொடருந்து நேற்று (11.05.2026) தனது சேவையை கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்திலிருந்து ஆரம்பித்துள்ளது.

இதற்கமைய, நேற்று(11) காலை 6.00 மணிக்கு கொழும்பிலிருந்து சேவையை ஆரம்பித்த குறித்த தொடருந்து, பிற்பகல் 2.25 மணியளவில் யாழ்ப்பாணம் மத்திய தொடருந்து நிலையத்தை சென்றடைந்துள்ளது.

பல்வேறு காரணங்களினால் கடந்த ஜனவரி மாதம் 31ஆம் திகதியன்று தனது சேவையை இடைநிறுத்தியிருந்த யாழ்தேவி கடுகதி தொடருந்து, சுமார் 100 நாட்களின் பின்னர் மீண்டும் யாழ்ப்பாணத்திற்கு சென்றுள்ளது.

இது குறித்து யாழ் தொடருந்து நிலைய அதிபர் பிரதீபன் கூறுகையில், தொடருந்து பாதை சீரமைப்பு உள்ளிட்ட பல காரணங்களால் இடைநிறுத்தப்பட்டிருந்த சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த சேவை திங்கள், புதன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறை தொடருந்து நிலையம் வரை பயணிக்கும் அதேவேளை,

காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு கோட்டைக்கான யாழ்தேவி தொடருந்து சேவை செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களில் முன்னெடுக்கப்படும்.

இதேவேளை, இந்த யாழ்தேவி தொடருந்தானது, குளிரூட்டப்பட்ட 04 முதலாம் வகுப்பு பெட்டிகளைக் கொண்டுள்ளது.

அத்துடன், தொடருந்து திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் ஊடாக அல்லது ஆசன முன்பதிவு வசதி கொண்ட தொடருந்து நிலையங்களுக்குச் சென்று பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்துகொள்ள முடியும் என்றும் அறிவித்துள்ளார்.