சமூக வலைத்தள புகழுக்காக உயிர் ஆபத்து சாகசம் : அதிரடியாக 4 இளம் பெண்கள் கைது!!

120

சமூக வலைதளப் புகழுக்காக போக்குவரத்து விதிகளை மீறி ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மூன்று இளம் பெண்கள் உள்ளிட்ட நால்வர் புத்தளம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புத்தளம் பகுதியில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், மூன்று பெண்கள் ஒரு மோட்டார் சைக்கிளில் தலைக்கவசம் அணியாமல், அதிவேகமாகவும் கவனக்குறைவாகவும் பயணித்து ‘ரீல்ஸ்’ (Reels) வீடியோ எடுத்துள்ளனர்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதையடுத்து காவல்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

வீடியோவை ஆதாரமாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், குறித்த மூன்று பெண்களும் மற்றும் அவர்களுக்கு வீடியோ எடுத்துக் கொடுத்த மற்றொரு பெண்ணும் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் மீது போக்குவரத்து விதிகளை மீறியமை, கவனக்குறைவாக வாகனத்தைச் செலுத்தியமை மற்றும் பிற வீதிப் பயனாளர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சமூக வலைதளப் புகழுக்காக வீதிகளில் ஆபத்தான செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதுடன், கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர்.