வவுனியாவில் PickMe முச்சக்கரவண்டிக்குத் தடை : தனியார் விடுதி நிர்வாகத்திற்கு சாரதிகள் அச்சுறுத்தல்!!

102

வவுனியா புகையிரத நிலைய வீதியில் அமைந்துள்ள தனியார் விடுதி ஒன்றில் தங்கியிருந்த சுற்றுலாப் பயணிகள், போக்குவரத்துக்காக PickMe செயலி ஊடாக முச்சக்கரவண்டியொன்றை முன்பதிவு செய்ததை அடுத்து, அங்கு பதற்றமான சூழல் நிலவியுள்ளது.

குறித்த விடுதியில் தங்கியிருந்த பயணிகள் தமது பயணத் தேவைகளுக்காக செயலியான PickMe மூலம் முச்சக்கரவண்டி ஒன்றினை அழைத்துள்ளனர்.

இதனையறிந்த அப்பகுதியில் உள்ள முச்சக்கரவண்டி தரிப்பிடத்தில் வழமையாகச் சேவையில் ஈடுபடும் சாரதிகள், குறித்த இடத்திற்கு வந்து கடும் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர்.

தமது தரிப்பிடப் பகுதியில் வெளிவாரி முச்சக்கரவண்டிகள் அல்லது செயலி மூலமான சேவைகளை அனுமதிக்க முடியாது எனக் கூறி, சாரதிகள் விடுதி நிர்வாகத்தினருடன் கடுமையான வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன்போது விடுதி நிர்வாகத்தினருக்கு அவர்கள் அச்சுறுத்தல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

“எமது பகுதியில் நாம் நீண்டகாலமாகச் சேவையில் ஈடுபட்டு வருகிறோம். எமது வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வகையில் இவ்வாறான செயலி மூலமான சேவைகளை விடுதிக்குள் அனுமதிக்கக் கூடாது” எனத் தெரிவித்தே இந்த எதிர்ப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் மீற்றர் இன்றியும், இரவு பகல் என அதிகரித்த கட்டணங்களை முச்சக்கரவண்டி தரிப்பிடத்தில் இருந்து சேவையில் ஈடுபடுபவர்கள் கோருவதினால், தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி இலகுவாகவும், குறைந்த செலவிலும் பயணங்களை மேற்கொள்ள முற்படும் பயணிகளுக்கு, இவ்வாறான உள்ளூர் முச்சக்கரவண்டி சாரதிகளின் செயற்பாடுகள் பெரும் அசௌகரியத்தை ஏற்படுத்தியுள்ளன.

இது வவுனியாவிற்கு வருகை தரும் பயணிகளின் வருகையைப் பாதிக்கும் என சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இவ்விடயம் தொடர்பில் உரிய அதிகாரிகள் கவனம் செலுத்தி, பயணிகளின் தெரிவுரிமைக்கு ஏற்ற வகையில் முறையான தீர்வொன்றைப் பெற்றுத்தர வேண்டும் என விடுதி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.