இலங்கையில் வாகனங்களின் விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்!!

32

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலை எதிர்வரும் இரண்டு வார காலப்பகுதியில் 10 சதவீதமளவில் உயர்வடையும் என அகில இலங்கை வாகன இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

டொலரின் பெறுமதி உயர்வு, சமூக பாதுகாப்பு உதவித்தொகை அறவீடு சட்டத்திருத்தம் ஆகிய காரணங்களால் இவ்வாறு விலை உயர்த்தப்பட்டுள்ளதாக சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

கொழும்பில் இன்று (15) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அகில இலங்கை வாகன இறக்குமதியாளர் சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் கூறுகையில்,

இலங்கை ரூபாவுக்கு நிகராக அமெரிக்க டொலரின் பெறுமதி சடுதியாக உயர்வடைந்துள்ளது. சமூக பாதுகாப்பு உதவுத்தொகை அறவீடு சட்டத்திருத்தம் செய்யப்பட்டு வரி தொகையிலும் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் ஹய்பிரிட் டொயோடா ரைசா ரக காருக்கான சமூக பாதுகாப்பு உதவுத்தொகை வரி 30 இலட்சமாக காணப்பட்டது. ஆனால் புதிய திருத்தத்துக்கமைய அந்த வரி 63 இலட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் 140 இலட்சம் ரூபா பெறுமதியான ரைசா ரக காருக்கான சமூக பாதுகாப்பு உதவுத்தொகை வரி 8 இலட்சம் முதல் 10 இலட்சம் ரூபா வரையில் உயர்வடையும்.

அதேபோல் யாரிஸ் ரக வாகனத்தின் உதவுத்தொகை வரி 4 அல்லது 5 இலட்சத்தாலும், வெசல் ரக காரின் உதவுத்தொகை வரி 12 இலட்சத்தாலும், லேன்ட் க்ரய்சர் காரின் உதவுத்தொகை வரி 30 இலட்சத்தாலும் உயர்வடையும்.

இதற்கமைய இறக்குமதி செய்யப்படும் சகல வாகனங்களின் விலைகளும் 10 சதவீதமளவில் உயர்வடையும். எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று வார காலப்பகுதிகளில் வாகனங்களின் விலை சடுதியாக உயர்வடையும் என தெரிவித்தார்.