இலங்கையில் வாகனம் வாங்க காத்திருப்போருக்கு அதிர்ச்சி : அடுத்தடுத்த வாரங்களில் ஏற்படப்போகும் விலை மாற்றம்!!

32

இலங்கையில் அடுத்த இரண்டு முதல் மூன்று வாரங்களில் வாகனங்களின் விலைகள் வேகமாக உயரும் என வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திகா சம்பத் மெரிஞ்சிகே தெரிவித்துள்ளார்.

டொலரின் பெறுமதி உயர்வு, சமூக பாதுகாப்பு உதவித்தொகை அறவீடு சட்டத்திருத்தம் ஆகிய காரணங்களால் இவ்வாறு விலை அதிகரிப்பு ஏற்படுவதாக அவர் கூறியுள்ளார்.

கொழும்பில் இன்றைய தினம் (15.05.2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்தே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் மேலும் தெரிவிக்கையில், இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலை எதிர்வரும் இரண்டு வார காலப்பகுதியில் 10 சதவீதமளவில் உயர்வடையும்.

இலங்கை ரூபாவுக்கு நிகராக அமெரிக்க டொலரின் பெறுமதி சடுதியாக உயர்வடைந்துள்ளது. சமூக பாதுகாப்பு உதவித்தொகை அறவீடு சட்டத்திருத்தம் செய்யப்பட்டு வரி தொகையிலும் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் 30ஆம் திகதிக்கு முன்னர் ஹய்பிரிட் டொயோடா ரைசா ரக காருக்கான சமூக பாதுகாப்பு உதவித்தொகை வரி 30 இலட்சமாக காணப்பட்டது. ஆனால் புதிய திருத்தத்துக்கமைய அந்த வரி 63 இலட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் 140 இலட்சம் ரூபா பெறுமதியான ரைசா ரக காருக்கான சமூக பாதுகாப்பு உதவித்தொகை வரி 8 இலட்சம் முதல் 10 இலட்சம் ரூபா வரையில் உயர்வடையும்.

அதேபோல் யாரிஸ் ரக வாகனத்தின் உதவித்தொகை வரி 4 அல்லது 5 இலட்சத்தாலும், வெசல் ரக காரின் உதவித்தொகை வரி 12 இலட்சத்தாலும், லேன்ட் க்ரய்சர் காரின் உதவித்தொகை வரி 30 இலட்சத்தாலும் உயர்வடையும்.

இதற்கமைய இறக்குமதி செய்யப்படும் சகல வாகனங்களின் விலைகளும் 10 சதவீதமளவில் உயர்வடையும். எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று வார காலப்பகுதிகளில் வாகனங்களின் விலை சடுதியாக உயர்வடையும் என்றார்.