இலங்கையர்களுக்கு கனவாக மாறும் வாகன கொள்வனவு : இந்த அரசிலும் தொடரும் ஏமாற்றம்!!

2

இலங்கையில் வாகனங்களின் விலைகள் 15 முதல் 20 சதவீதம் வரை அதாவது 10 முதல் 15 லட்சம் ரூபாயால் அதிகரிக்கக்கூடும் என லங்கா வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் சம்பத் மெரெஞ்சிகே தெரிவித்துள்ளார்.

வாகன இறக்குமதிக்காக அரசாங்கம் விதித்துள்ள புதிய வரிகள் குறித்து கருத்து வெளியிடும் போதே அவர் இதனைப் குறிப்பிட்டுள்ளார்.

“தற்போதைய பொருளாதாரச் சூழ்நிலையைக் கையாள்வதற்காக ஜனாதிபதி மற்றும் அமைச்சரவை எடுத்துள்ள கொள்கை ரீதியான முடிவுகள் பாராட்டுக்குரியவை.

சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளுக்கு அமைய பொருளாதாரத்தை முன்னோக்கி கொண்டு செல்ல இந்த முகாமைத்துவ நடவடிக்கைகள் உதவும்.

மே மாதம் 15 ஆம் திகதி நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில் சுங்க வரியில் 50 சதவீதம் கூடுதல் கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது.

வாகன இறக்குமதியின் போது சுங்க வரி, உற்பத்தி வரி மற்றும் வற் வரி என மூன்று வகையான வரிகள் விதிக்கப்படும். இந்த நிலையில், இந்த புதிய திருத்தத்தின் காரணமாக சந்தையில் வாகனங்களின் விலைகள் கணிசமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதற்கமைய, சந்தையில் மக்களால் அதிகம் கொள்வனவு செய்யப்படும் வெசல் ரக வாகனங்களின் விலை 10 முதல் 12 லட்சம் ரூபாவினாலும், யாரிஸ் மற்றும் Passo போன்ற கார்களின் விலை 5 முதல் 6 லட்சம் ரூபாயினாலும் அதிகரிக்கும்.

சர்வதேச ரீதியிலான போர் சூழல், டொலரின் மதிப்பு உயர்வு, உலகளாவிய எரிபொருள் விலை ஏற்றம் மற்றும் நாட்டின் வெளிநாட்டு கையிருப்புப் பற்றாக்குறை போன்ற காரணங்களை அடிப்படையாகக் கொண்டே அரசாங்கம் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது.

இந்த வரி அதிகரிப்பானது முதற்கட்டமாக மூன்று மாத காலத்திற்கே விதிக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும், உலக சந்தையில் எரிபொருள் விலையில் ஏற்படும் மாற்றங்களைப் பொறுத்தே இது எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதைத் தீர்மானிக்க முடியும்.

இந்த விலை உயர்வு காரணமாக சிறிய ரக வாகனங்களான எல்டோ மிரா ஆகியவற்றின் விலைகள் 5 முதல் 6 இலட்சம் ரூபாவினாலும், பிராடோ போன்ற சொகுசு ஜீப் ரக வாகனங்களின் விலை வரிகள் மற்றும் செலாவணிப் பிரச்சினைகளுடன் சேர்த்து சுமார் 30 முதல் 50 லட்சம் ரூபாய் வரையிலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

எனவே, வாகனங்களை புதிதாக இறக்குமதி செய்து வாங்குவதை விட, தற்போது உள்நாட்டுச் சந்தையில் விற்பனைக்கு உள்ள வாகனங்களை கொள்வனவு செய்வதே மக்களுக்குச் சாதகமானது.

நாட்டு மக்களுக்கு மலிவு விலையில் வாகனங்களை வழங்கத் தங்களது சங்கம் தயாராக உள்ளது” என சம்பத் மெரெஞ்சிகே மேலும் தெரிவித்தார்.