
ஹட்டன் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 7 வயதுடைய மாணவன் ஒருவர், தனியாக கொழும்பு செல்ல முயன்ற நிலையில் இன்று (27) ஹட்டன் பஸ் நிலையத்தில் வைத்து மீட்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
ஹட்டன் இலங்கை போக்குவரத்து சபை (SLTB) பஸ் நிலைய நேரக் காப்பாளரின் அவதானமான நடவடிக்கையினாலேயே சிறுவன் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பில் தங்கி வேலை செய்து வரும் தனது பெற்றோரை பார்க்கவே தாம் தனியாக பஸ்ஸில் கொழும்பு செல்ல முயன்றதாக அந்தச் சிறுவன் நேரக் காப்பாளரிடம் தெரிவித்துள்ளான்.
மேலும், பயணச் செலவிற்காக தனது பெரியம்மா பணம் வழங்கியதாகவும் கூறியுள்ளார். சிறுவன் தனியாக பயணம் செய்ய முயன்றதை அடுத்து சந்தேகமடைந்த நேரக் காப்பாளர், அவனை பஸ்ஸில் ஏற விடாமல் தடுத்து வைத்து உடனடியாக ஹட்டன் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார், சிறுவனைப் பொறுப்பேற்று பாதுகாப்பாக ஹட்டன் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த ஹட்டன் பொலிஸ் நிலைய உயர் அதிகாரி ஒருவர், “சிறுவன் தொடர்பில் ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது.
நீதிமன்ற நடைமுறைகளின் பின்னர், சிறுவனின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்களை அடையாளம் கண்டு அவர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார்.




