
வவுனியா மாநகரசபைக்கு சொந்தமான காணியில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கடைகள் மாநகரசபை உத்தியோகத்தர்களால் இன்றையதினம் அகற்றப்பட்டு வந்த நிலையில் முன்னாள் துணைமுதல்வரின் தலையீட்டை அடுத்து தற்காலிகமாக அது நிறுத்தப்பட்டது.
வவுனியா கொறவப்பொத்தான வீதியின் இரு பகுதியிலும் இருந்த நடைபாதை கடைகள் கடந்தவருடம் மாநகரசபையால் அகற்றப்பட்டதுடன் அங்கு வியாபார செயற்பாடுகளை மேற்கொண்டு வந்த வியாபாரிகளுக்கு வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக இருந்த மாநகரசபைக்கு சொந்தமான காணியில் தற்காலிக இடங்கள் ஒதுக்கப்பட்டு வியாபார செயற்பாடுகள் இடம்பெற்று வந்தது.
இந்நிலையில் வவுனியா மாநகரசபையின் முதல்வர் மற்றும் பிரதி முதல்வர் ஆகியோர் மீது பிறிதொரு விடயம் தொடர்பாக கொழும்பு நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் சபையின் மக்கள் பிரதிநிதிகளின் செயற்பாட்டிற்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருந்தது. குறித்த தடை உத்தரவு இன்றுவரை நீடித்து வருகின்றது.
இந்தநிலையில் குறித்த பகுதியில் அமைக்கப்பட்ட வியாபார நிலையங்கள் உரிய அனுமதிகளை பெற்று அமைக்கப்படவில்லை. எனவே அவற்றை இன்று 31 ஆம் திகதிக்குள் அகற்ற வேண்டும் என மாநகரசபையின் ஆணையாளரால் அண்மையில் அறிவித்தல் ஒட்டப்பட்டது.

இந்நிலையில் இன்றையதினம் குறித்த பகுதிக்கு சென்ற மாநகரசபையின் அதிகாரிகள் மற்றும் பொலிசார் அகற்றப்படாத வியாபாரநிலையங்களை அகற்றும் செயற்ப்பாட்டில் ஈடுபட்டனர். அதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனையடுத்து அங்கு சென்ற மாநகரசபையின் முன்னாள் துணை முதல்வர் ப.கார்த்தீபன் தனது கடும் எதிர்ப்பை தெரிவித்ததுடன், மாநகரசபையின் அதிகாரிகளிடம் சில விடயங்களையும் எடுத்துக் கூறியிருந்தார்.
இதனையடுத்து கடைகளை அகற்றும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அத்துடன் வியாபாரிகளின் விபரங்களை சபையின் அதிகாரிகள் பெற்றுச்சென்றனர்.
இதேவேளை பாதிக்கப்பட்ட வியாபாரிகள் கூறும் போது குறித்த கடைகளை எமது நகைகளை அடைவு வைத்தும் கடன் பட்டுமே அமைத்திருந்தோம். முன்னர் இருந்த நிர்வாகம் சொல்லியே நாம் இதனை அமைத்தோம். தற்போது அகற்றுமாறு சொல்வதால் தமது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கவலை தெரிவித்தனர்.




