கார் மரத்தில் மோதி மருத்துவ மாணவி பரிதாபமாக பலி : சுற்றுலா சென்றிருந்த போது பெரும் சோகம்!!

14

சென்னை கேளம்பாக்கம் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் வசித்து வருபவர் அந்தோணிராஜ். இவர் நேற்று முன்தினம் தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் 2 கார்களில் சென்னையில் இருந்து வேளாங்கண்ணி பேராலயத்திற்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

இதில் அந்தோணிராஜ் உட்பட 6 பேர் பயணம் செய்த ஒரு காரை அவரது உறவினர் சத்தியராஜ் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இவர்களின் வாகனம் மயிலாடுதுறை அருகே பெரம்பூர் காவல் எல்லைக்கு உட்பட்ட கடலி என்ற இடத்தின் அருகே வந்து கொண்டிருந்தது.

அப்போது எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த கார், சாலையோரம் இருந்த ஒரு பெரிய மரத்தின் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தின் கொடூரமான தாக்கத்தால் காரில் பயணம் செய்த அந்தோணிராஜ், அவரது மனைவி சங்கீதா, மகள் ஹரிணி மற்றும் உறவினர்கள் லிபியா ஜாய்சி, சத்தியராஜ், பிரேமா ஆகிய 6 பேரும் உடல் முழுவதும் பலத்த காயமடைந்தனர்.

விபத்தைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர், காயமடைந்தவர்களை மீட்டுச் சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ஹரிணியைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

விபத்தில் சிக்கிப் பலியான 20 வயது இளம் பெண் ஹரிணி, சென்னையில் 2-ம் ஆண்டு மருத்துவம் படித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. காயமடைந்த மற்ற 5 பேருக்கும் மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தச் சோகமான விபத்து குறித்துப் பெரம்பூர் காவல் ஆய்வாளர் மலைச்சாமி வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்.