சிசேரியன் அறுவை சிகிச்சையின் நடுவில் ஓட்டம் பிடித்த மருத்துவர் : கர்ப்பிணி பலி!!

19

சிசேரியன் அறுவை சிகிச்சையின் நடுவில் மருத்துவர் ஒருவர் ஓட்டம் பிடித்ததைத் தொடர்ந்து பெண்ணொருவர் பரிதாபமாக பலியாகியுள்ளார். உத்தரப்பிரதேசத்திலுள்ள Sonbhadra என்னுமிடத்தில் வாழ்ந்துவரும் விவசாயியான தேவ் நாராயணின் மனைவி சீமா (34). நிறைமாத கர்ப்பிணியான சீமாவுக்கு கடந்த வெள்ளிக்கிழமை பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

உடனடியாக அவரை அருகிலுள்ள ஆரம்ப சுகாதார மையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளார் தேவ். ஆனால், அங்கு மருத்துவர்கள் யாரும் இல்லாததால், தனியார் மருத்துவமனை ஒன்றிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார் சீமா.

அந்த மருத்துவமனையில் Dr. நஸீம் அஹமது என்பவர் தன் உதவியாளர்களான இரண்டு செவிலியர்களுடன் சீமாவுக்கு சிசேரியன் அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார்.

மனைவியை பிரசவ அறைக்குள் அழைத்துச் சென்று வெகுநேரமாகியும் யாரும் வெளியே வராததால், மனைவியைப் பார்க்கச் சென்றுள்ளார் தேவ். ஆனால், அங்கு சீமாவின் உயிரற்ற உடல்தான் இருந்துள்ளது.

நடந்தது என்னவென்றால், Dr. நஸீம் ஒரு ஆயுர்வேத மருத்துவர். அவர் சிசேரியன் செய்ய உரிமமோ, பயிற்சியோ பெறாதவர்.

ஆகவே, குழந்தையை அறுவை சிகிச்சை செய்து வெளியே எடுத்தபின், தாய்க்கு தையல் போட முடியாததால், அவரை அப்படியே விட்டு விட்டு Dr. நஸீம் மற்றும் அவரது குழுவினர் வேறு வழியாக ஓட்டம் பிடித்துள்ளனர். சீமா பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

தேவின் புகாரைத் தொடர்ந்து, அந்த மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. Dr. நஸீம் மற்றும் அவரது குழுவினரை பொலிசார் தேடிவருகிறார்கள்.

Dr. நஸீமைக் குறித்து தகவல் கொடுத்தால் 25,000 ரூபாயும், செவிலியர் சல்மாவைக் குறித்து தகவல் கொடுத்தால் 10,000 ரூபாயும் சன்மானம் அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.