
இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் மூன்று பெண்கள் இணைந்து ஒரு பெண்ணைக் கொன்றுவிட்டு ஆடிய நாடகம், பொலிஸ் விசாரணையில் வெட்டவெளிச்சமாகியுள்ளது. கர்நாடகா மாநிலத்திலுள்ள Chikkaballapur என்னுமிடத்தைச் சேர்ந்தவர் பாவ்யா.
கடந்த வியாழக்கிழமை, அதாவது, மே மாதம் 28ஆம் திகதி, நள்ளிரவு பொலிசாரை அழைத்த பாவ்யா, தன் வீட்டுக்குள் பர்தா அணிந்த இருவர் நுழைந்து தன் சகோதாரர் மனைவியை கொலை செய்துவிட்டு அவரது நகைகளையும் பறித்துச் சென்றுவிட்டதாக கூறியுள்ளார்.
தானும் பயங்கரமாக தாக்கப்பட்டதாகவும், தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் பாவ்யா கூற, பொலிசார் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளார்கள்.
பொலிசார் பாவ்யா வீட்டுக்கு வந்தபோது, அங்கு அவரது சகோதரர் மனைவியான புஷ்பலதா (23) கழுத்தறுபட்ட நிலையில் இறந்து கிடந்துள்ளார்.
ஆனால், வீட்டில் சிறிது இரத்தம் மட்டுமே சிந்திக்கிடந்துள்ளது. கடுமையாக தாக்கப்பட்டதாக கூறிய பாவ்யாவின் உடலில் பெரிய அளவில் காயங்களே இல்லை.
அத்துடன், தடயவியல் நிபுணர்கள் புஷ்பலதா கழுத்தறுத்துக் கொல்லப்படவில்லை, அவர் முகத்தில் தலையணையை வைத்து அழுத்திக் கொல்லப்பட்டுள்ளார். பின் யாரோ அவரது கழுத்தை அறுத்துள்ளார்கள், அதனால்தான் வீட்டில் இரத்தம் அதிகமில்லை என்றும் கூற, பொலிசாரின் சந்தேகம் அதிகரித்துள்ளது.
அதைத் தொடர்ந்து பொலிசார் மீண்டும் பாவ்யாவிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளார்கள். நடந்தது என்னவென்றால், பாவ்யா தன் கணவனை விட்டுவிட்டு, கிருஷ்ணா என்னும் ட்ரக் சாரதியுடன் ஓடிவந்துள்ளார்.
ஆனால், கிருஷ்ணாவோ கொஞ்ச நாட்களில் பாவ்யாவின் சில அந்தரங்க வீடியோக்களைக் காட்டி அவரை மிரட்டி பணம் பிடுங்கத் துவங்கியுள்ளார்.
ஆகவே, தன் உறவினரான லோஹித் என்பவரின் உதவியை நாடியுள்ளார் பாவ்யா. லோகித்தோ, அந்த வீடியோக்களை வைத்து பாவ்யாவை மிரட்டத் துவங்க, அவருக்கு ஆறு லட்ச ரூபாய் கொடுத்துள்ளார் பாவ்யா.
லோஹித் தொடர்ந்து பணம் கேட்டு மிரட்ட, கடைசியில் வேறு வழியில்லாமல் நடந்ததை தன் தாய் மற்றும் பாட்டியிடம் பாவ்யா கூற, மூன்று பெண்களுமாக திட்டம் ஒன்றைத் தீட்டியுள்ளார்கள்.
அதன்படி தன் சகோதரர் மனைவியான புஷ்பலதாவை வீட்டுக்கு வரவழைத்துள்ளார் பாவ்யா. நள்ளிரவில் லோஹித் வீட்டுக்கு வர, பாவ்யா கதவைத் திறந்துவிட, லோஹித் புஷ்பலதாவின் முகத்தில் தலையணையை வைத்து அழுத்திக் கொன்றுள்ளார்.
பின்னர் கொள்ளையர்கள் வந்ததுபோல் காட்ட, உயிரிழந்த புஷ்பலதாவின் கழுத்தை அறுத்துள்ளார் லோஹித்.
அவர் பாவ்யாவிடம் கேட்ட பணத்துக்காக புஷ்பலதாவின் தாலியை எடுத்துக்கொண்டு வெளியேற, பொலிசாரை அழைத்த பாவ்யா கொள்ளை நடந்ததாக கதைவிட, இப்போது பாவ்யா, பாவ்யாவின் தாய், பாட்டி மற்றும் லோஹித் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.




