
புதிய இணைப்பு : பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தில் 129 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
பிலிப்பைன்ஸில் இன்று (8) காலை 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவானது. இந்த நிலநடுக்கம் 10 கி.மீ கடல் ஆழத்தில் ஏற்பட்டதாக ஜேர்மனிய புவியியல் ஆய்வு மையம் கூறியுள்ளது.
முதலாம் இணைப்பு : தெற்கு பிலிப்பைன்ஸின் மிண்டனாவோ பிராந்தியத்தில் 7.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் தகவலுக்கமைய, இந்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி காலை 07.37 மணியளவில் சுமார் 35 கிலோமீட்டர் ஆழத்தில் தாக்கியுள்ளது.
இதனைத் தொடர்ந்து பிலிப்பைன்ஸ் மற்றும் அதன் அண்டை நாடான இந்தோனேசியாவிற்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடலோரப் பகுதிகளில் வாழும் மக்களை வெளியேறுமாறு கோரி பிலிப்பைன்ஸின் நில அதிர்வு நிறுவனம் சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது.
பிலிப்பைன்ஸின் சில பகுதிகளில் சுனாமி அலைகள் அலை மட்டத்திற்கு மேல் 1 முதல் 3 மீட்டர் வரை உயரக்கூடும் என அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பு தெரிவித்துள்ளது.
நிலநடுக்கம் காரணமாக ஜெனரல் சாண்டோஸ் நகரிலுள்ள வணிக வளாகங்கள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளதை காட்டும் புகைப்படங்களும் வெளியாகியுள்ளது.
தங்களது கொடியேற்ற நிகழ்வின் போது இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், அதன் காரணமாக பொலிஸ் கட்டிடத்தில் சில விரிசல்கள் ஏற்பட்டுள்ளதாகவும் பிலிப்பைன்ஸின் சரங்கானியிலுள்ள அலபெல் நகர பொலிஸ் தலைவர் தெரிவித்துள்ளார்.
உடனடியாக உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை என்றும், ஆனால் நடுக்கத்தைத் தொடர்ந்து சிலர் மயக்கமடைந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், நாங்கள் அனுபவித்த மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் இதுதான் என அவர் தொலைபேசி மூலம் தெரிவித்துள்ளார்.
இந்தோனேசியாவும் தனது வடகிழக்கு கடலோரப் பகுதிக்கு சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.




