பிரித்தானியாவை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ள இலங்கைப் பெண்ணின் கோரிக்கை!!

211

இலங்கைப் பெண்ணொருவரும் அவரது பிள்ளைகளும் 14 நாட்களுக்குள் பிரித்தானியாவை விட்டு வெளியேறவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், என் குடும்பத்தைப் பிரித்துவிடாதீர்கள் என அவர் பிரித்தானிய உள்துறை அலுவலகத்துக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.

2022ஆம் ஆண்டு, கல்வி கற்பதற்காக பிரித்தானியா வந்த இலங்கையரான Rasika Samarasinghe (46), சட்டப்படி தன் மனைவி பிள்ளைகளையும் பிரித்தானியாவுக்கு அழைத்துவந்தார். அவர் இப்போது இங்கிலாந்தில் care worker ஆக பணி செய்துவருகிறார்.

Rasikaவின் மனைவியான Chamila Dilrakshi (45), உதவி ஆசிரியையாக பணியாற்றிவருகிறார். தம்பதியருக்கு, Thedara (12), Vivas (9) மற்றும் Hiran (8) ஆகிய மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள்.

இந்நிலையில், Chamilaவும் அவரது பிள்ளைகளும் 14 நாட்களுக்கும் பிரித்தானியாவை விட்டு வெளியேறவேண்டும் என பிரித்தானிய உள்துறை அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.

அதாவது, 2024ஆம் ஆண்டு, மார்ச் மாதம் முதல், care worker ஆக பணி புரிவோர் தங்கள் குடும்பங்களை பிரித்தானியாவுக்கு அழைத்துவர அனுமதி இல்லை என அரசு அறிவித்துள்ளது. அதேபோல, 2025ஆம் ஆண்டு, ஜூலை மாதம், வெளிநாடுகளிலிருந்து care worker பணியாளர்களை வேலைக்கு எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

விடயம் என்னவென்றால், தற்போது பிரித்தானியாவை விட்டு வெளியேறும்படி உள்துறை அலுவலகத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளவர்கள், இந்த விதிகள் அமுலுக்கு வரும் முன்பே பிரித்தானியாவுக்கு வந்தவர்கள்.

இந்நிலையில், நாங்கள் முறைப்படிதான் புலம்பெயர்ந்தோம், சட்டத்துக்கு உட்பட்டு நடக்கிறோம், இருந்தும் இப்படி எங்கள் பிள்ளைகளை தங்கள் தந்தையை விட்டுப் பிரிப்பது அவர்களுடைய மன நலனை பாதிக்கும் என்று கூறியுள்ள Chamila,

தங்களை நாட்டை விட்டு வெளியேற்றும் முன், தானும் தன் கணவரும் சமுதாயத்துக்கு ஆற்றியுள்ள சேவைகளை கருத்தில் கொள்ளுமாறு உள்துறை அலுவலகத்தைக் கோரியுள்ளார்.

Chamila குடும்பத்தினருக்கு ஆதரவாக, உள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினரான Victoria Collins உட்பட ஏராளமானோர் குரல் கொடுத்துவருகிறார்கள்.