வவுனியாவில் சொல்லிசைப் பாடகர் சங்கீதனை உடனடியாக விடுவிக்கக் கோரி கலைஞர்கள், பொதுமக்கள் மாபெரும் ஆர்ப்பாட்டம்!!

143

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள பிரபல சொல்லிசைப் (Rap) பாடகர் சங்கீதனை எவ்வித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி, வவுனியாவில் இன்று (08.06.2026) கண்டன கவனயீர்ப்புப் போராட்டம் மற்றும் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா பழைய பேருந்து நிலையப் பகுதியில் ஆரம்பமான இப்போராட்டத்தை வவுனியா மாவட்ட கலைஞர்கள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்திருந்தனர். இதில் அரசியல் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள், கலைஞர்கள் மற்றும் பெருந்திரளான பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களது பலத்த எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

பழைய பேருந்து நிலைய பகுதியில் திரண்ட போராட்டக்காரர்கள், அங்கிருந்து கோஷங்களை எழுப்பியவாறு வவுனியா மணிக்கூட்டு கோபுரச் சந்தி வரை பேரணியாகச் சென்றனர். பின்னர் மீண்டும் போராட்ட இடத்தை வந்தடைந்து தமது கவனயீர்ப்புப் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.

கைது நடவடிக்கைக்குக் கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியிருந்தனர். குறிப்பாக அமைச்சர் சந்திரசேகரன் சொன்னால் இனிக்கும், சங்கீதன் சொன்னால் புளிக்குதோ?,

கலைஞர்களுக்கும் கைவிலங்கோ?, பாடுவதும் ஆடுவதும் பயங்கரவாதமா? போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி, அரசாங்கத்திற்கும் பொலிஸாருக்கும் எதிராகக் கோஷங்களை எழுப்பினர்.

போராட்டத்தின் போது கருத்துத் தெரிவித்த ஏற்பாட்டாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், இந்நாட்டில் கருத்துச் சுதந்திரமும், கலைஞர்களின் உரிமைகளும் மிக மோசமான முறையில் நசுக்கப்பட்டு வருவதாகக் கவலை வெளியிட்டனர்.

ஒரு கலைஞன் சமூக அவலங்களை பாடுவதும் ஆடுவதும் பயங்கரவாதச் செயலாகாது. கலைஞர்கள் மீதான இத்தகைய அடக்குமுறைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். பாடகர் சங்கீதன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் கைவிடப்பட்டு, அவர் உடனடியாகவும் நிபந்தனையின்றியும் விடுதலை செய்யப்பட வேண்டும்” என அவர்கள் வலியுறுத்தினர்.