வவுனியா புற்குளம் கண்ணகை அம்மன் ஆலய பொங்கல் உற்சவம் : பக்தர்களின் நலன் கருதி வீதி செப்பனிடல்!!

118

வவுனியா புற்குளம் ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் மஹோற்சவத்தை முன்னிட்டு, ஆலயத்திற்கு வருகை தரும் பக்தர்களின் போக்குவரத்து வசதியினை மேம்படுத்தும் நோக்கில் ஆலய வீதி அவசரமாக செப்பனிடப்பட்டு மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டுள்ளது.

ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவத்தை முன்னிட்டு, பக்தர்களின் வருகை மிக அதிகமாக இருக்கும் என்பதைக் கருத்திற்கொண்டு, ஆலய நிர்வாகத்தினர் வீதியை புனரமைத்து தருமாறு விடுத்த வேண்டுகோளுக்கிணங்க இவ்வீதி அபிவிருத்திப் பணி முன்னெடுக்கப்பட்டது.

2026ம் ஆண்டுக்கான பாதீட்டு நிதியின் (Budget Fund) கீழ் இவ்வீதியைச் செப்பனிடுவதற்கான முழுமையான நிதியொதுக்கீட்டை கனகராயன்குளம் வடக்கு வட்டார உறுப்பினர் கனகராசா பிரதீபன் வழங்கியிருந்தமையுடன் இதற்கான முழுமையான களப்பணிகளையும், அவசர ஏற்பாடுகளையும் வவுனியா வடக்கு உபதவிசாளர் விநாயமூர்த்தி சஞ்சுதன் முன்னின்று ஒழுங்குபடுத்தியிருந்தார்.

மேலும் இந்த அபிவிருத்திப் பணியை மிகக் குறுகிய காலத்திற்குள் சட்டபூர்வமாகவும் துரிதமாகவும் நடைமுறைப்படுத்துவதற்கு வவுனியா வடக்கு பிரதேச சபைச் செயலாளர் திரு.தேவராசா கார்த்திகன் முழுமையான நிர்வாக ஒத்துழைப்பினை வழங்கியிருந்தார் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

நீண்ட நாட்களாக புனரமைக்கப்படாமல் இருந்த புற்குளம் ஆலய வீதி, பொங்கல் உற்சவத்திற்குச் சரியாக செப்பனிடப்பட்டதன் மூலம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் எவ்வித சிரமமுமின்றி தங்களது வழிபாடுகளை மேற்கொள்ள இலகுவாக அமைந்துள்ளது

சமய உணர்வோடும் மக்கள் நலன்சார்ந்தும் உடனடியாகச் செயலாற்றிய மக்கள் பிரதிநிதிகளுக்கும், பிரதேச சபைச் செயலாளருக்கும் ஆலய நிர்வாகத்தினரும் அப்பகுதி மக்களும் தங்களது நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொண்டுள்ளனர்.