இந்த அறிகுறிகள் தென்படுபவர்கள் தாமதிக்க வேண்டாம் : விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை!!

28

இரண்டாம் இணைப்பு

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய தொற்றுநோய் தடுப்பு நிறுவனத்தின் சிரேஷ்ட விசேட வைத்திய நிபுணர் டாக்டர் ஆனந்த விஜேவிக்ரம எச்சரித்துள்ளார்.

இது நாட்டின் சுகாதாரக் கட்டமைப்பிற்கு ஏற்படும் அழுத்தம் குறித்து சுகாதார அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போதைய இதே நிலை நீடித்தால், வரவிருக்கும் வாரங்களில் மருத்துவமனைகள் தாங்க முடியாத சுமையை எதிர்கொள்ள நேரிடும் என்றும் எச்சரித்துள்ளார்.

முதலாம் இணைப்பு : நாடு முழுவதும் டெங்கு நோய் பரவல் வேகமாக அதிகரித்து வருவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதுவரை 19 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும், அதேசமயம் கடந்த ஆண்டு (2025) 29 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, கேகாலை, இரத்தினபுர, புத்தளம், கல்முனை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்கள் டெங்கு அபாய மாவட்டங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

தெளிவான நீர் உள்ள சூழலில் டெங்கு நுளம்புகள் இனப்பெருக்கம் செய்யும் அபாயம் உள்ளதகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் நுளம்பு கடியை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், அதிக காய்ச்சல், தலைவலி, தசை மற்றும் மூட்டு வலி, குமட்டல் மற்றும் வாந்தி, தோலில் சிவப்புப் புள்ளிகள் மற்றும் இரத்தப்போக்கு போன்ற அறிகுறிகள் உள்ளவர்கள் உடனடியாக மருத்துவமனையிலோ அல்லது மருத்துவரிடமோ சிகிச்சை பெற வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

அதேநேரம், காய்ச்சலை கட்டுப்படுத்த பரசிட்டமோலை மாத்திரம் எடுத்துக்கொள்ளுமாறும், ஏனைய மருந்துகளைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.