இலங்கையில் ஏற்படவுள்ள : அபாயம் கடல் நீரை பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்படலாமென எச்சரிக்கை!!

15

இலங்கையில் கடுமையான வறட்சி ஏற்படும் பட்சத்தில் குடிநீருக்காக கடல் நீரை பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்படலாம் என அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் மேலதிக செயலாளர் கே.ஜி.பி.தர்மதிலக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இம்முறை எதிர்பார்க்கப்படும் எல் நினோ நிலைமை முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகக் கடுமையாக இருக்கக்கூடும். இதன் தாக்கம் காரணமாக நாடு முழுவதிலும் உள்ள பிரதான நீர்நிலைகள் வற்றிப்போகும் அபாயம் உள்ளது

தற்போதைய சூழ்நிலையை எதிர்கொள்வதற்கு முன்கூட்டியே தயாராக வேண்டியுள்ளது. அவசர காலங்களில் குடிநீர் விநியோகத்திற்காக தேசிய அனர்த்த முகாமைத்துவ சேவை மையத்திடம் உள்ள நீர் விநியோக வாகனங்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.

அத்துடன், நாங்கள் இதற்கு முன் இப்படியொரு எல் நினோ நிலைமையைக் கேள்விப்பட்டதில்லை. இதற்காக நாம் பெருமளவில் தயாராக வேண்டியிருக்கும்.

பொதுவாக, மழைக்காலத்தில் தேசிய அனர்த்த முகாமைத்துவ சேவை மையத்தின் மூலம் ஒரு மாதத்திற்கு நாடு முழுவதற்கும் எம்மால் நீர் விநியோகம் செய்ய முடியும்.

ஆனால், இந்த எல் நினோ நிலைமை ஏற்பட்டால், பெருமளவில் நீரை விநியோகிப்பதற்கு தற்போதுள்ள நீர் விநியோக வாகனங்கள் போதுமானதாக இருக்காது.

நீர்நிலைகள் முற்றாக வற்றிப்போகக்கூடும் என்பதால், நீரைப் பெற்றுக் கொள்வதற்குக் கூட ஆதாரங்கள் இல்லாமல் போகலாம். அத்தகைய சூழ்நிலையில், கடல் நீரைச் சுத்திகரித்து விநியோகிப்பது குறித்தும் நாம் பரிசீலிக்க வேண்டியிருக்கும் என தெரிவித்துள்ளார்.