
ஆண்கள் ஈட்டி எறிதல் உலக தரவரிசைப் பட்டியலை உலக தடகள சம்மேளனம் வெளியிட்டுள்ளது. இலங்கையின் முன்னணி வீரர் ருமேஷ் தரங்க உலக அளவில் 3ஆவது இடத்திற்கு முன்னேறி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
புதிய தரவரிசைப் பட்டியலின்படி, ருமேஷ் தரங்க 1,324 புள்ளிகளைப் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார்.
இதில், ஜெர்மனியின் ஜூலியன் வெபர் 1,360 புள்ளிகளுடன் முதலிடத்திலும், கிரெனடாவின் எண்டர்சன் பீட்டர்ஸ் 1,326 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளனர்.

குறிப்பாக, இரண்டாம் இடத்தில் உள்ள எண்டர்சன் பீட்டர்ஸுக்கும் ருமேஷ் தரங்கவிற்கும் இடையில் வெறும் 2 புள்ளிகள் மட்டுமே வித்தியாசமாக இருப்பது கவனிக்கத்தக்க விடயமாகும்.
மேலும், இரண்டு ஒலிம்பிக் தங்கப் பதக்கங்களை வென்ற உலகப் புகழ்பெற்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 5ஆவது இடத்திலும், பாகிஸ்தானின் அர்ஷாத் நதீம் 10ஆவது இடத்திலும் காணப்படுகின்றனர்.
அண்மையில் இத்தாலியின் தலைநகரான ரோமில் நடைபெற்ற வைர லீக் தடகளத் தொடரில் ருமேஷ் தரங்க 92.62 மீற்றர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து புதிய இலங்கை சாதனையையும், புதிய போட்டி சாதனையையும் படைத்திருந்தார்.
அந்த அபார செயல்பாட்டின் பலனாக தற்போது உலக தரவரிசையில் முதல் மூன்று இடங்களுக்குள் நுழைந்துள்ள ருமேஷ் தரங்க, சர்வதேச தடகள அரங்கில் இலங்கைக்கு மேலும் பெருமை சேர்த்துள்ளார்.




