தன்னிடம் அதிகளவான நகை இருப்பதாக சமூக ஊடகங்களில் பெருமையடித்துக்கொண்ட பெண்ணுக்கு நேர்ந்த துயரம்!!

25

தன்னிடம் எக்கச்சக்கமான நகை இருப்பதாக சமூக ஊடகங்களில் பெருமையடித்துக்கொண்டார் பெண்ணொருவர். விளைவு? கொள்ளையர்கள் வந்து அவ்வளவு நகைகளையும் கொள்ளையடித்துச் சென்றுவிட்டார்கள்!

அந்தரங்க வாழ்க்கை முதல், அன்றாடக செயல்கள் வரை, சமூக ஊடகங்களில் பகிர்ந்துகொள்வது என்பது, இன்று, வெளிநாட்டு பிரபலங்கள் மட்டுமல்ல, நம் ஊர்களிலும் பலருக்கும் வழக்கமாகிவிட்டது.

ஆனால், அதனால் ஆபத்து உருவாகலாம் என்பதை யோசிக்கும் நிலையில் பலரும் இல்லை. எனக்கு இத்தனை பின்தொடர்வோர் இருக்கிறார்கள், எனது வீடியோக்களை இத்தனை பேர் பார்வையிட்டுள்ளார்கள் என்பதைச் சொல்வதில் பலருக்கும் ஒரு பெருமை!

அப்படித்தான் இந்தியாவின் மத்தியப்பிரதேசத்திலுள்ள ஒரு பெண்ணும் செய்துவந்தார். அவரது பெயர், ரச்னா குர்ஜார். ரச்னாவை சமூக ஊடகம் ஒன்றில் ஒரு லட்சம் பேர் பின்தொடர்கிறார்கள்.

சமீபத்தில் ரச்னா தனது வீடு மற்றும் வீட்டில் வைத்துள்ள நகைகள், பணம் முதலானவற்றை வீடியோ ஒன்றில் காட்டியிருந்தார்.

இந்நிலையில், சனிக்கிழமை நள்ளிரவு 2.00 மணியளவில் முகமூடி அணிந்த சிலர், ரச்னாவின் வீட்டிலிருந்த சிசிடிவி கமெராக்களை குச்சி ஒன்றின் உதவியால் திருப்பி வைத்துவிட்டு, வீட்டுக்குள் நுழைந்துள்ளார்கள்.

ரச்னா குடும்பம் தூங்கிக்கொண்டிருந்த அறையை வெளிப்பக்கமாக தாழ்ப்பாள் போட்டுவிட்டு, வீட்டிலிருந்த சுமார் 8 லட்சம் முதல் 10 லட்ச ரூபாய் மதிப்புடைய நகைகள், பணம், விலைமதிப்புள்ள பொருட்கள் அனைத்தையும் வாரிச் சென்றுவிட்டார்கள்.

பிரிட்ஜிலிருந்த ஒரு பாக்கெட் பாலைக் கூட கொள்ளையர்கள் விட்டுவைக்கவில்லையாம். அதிகாலை 4.00 மணியளவில் கண் விழித்த குடும்ப உறுப்பினர் ஒருவர், தங்கள் அறை வெளிப்பக்கமாக தாழ்ப்பாள் போடப்பட்டிருப்பதை அறிந்து உறவினர்களை அழைக்க, அவர்கள் வந்து கதவைத் திறந்துவிட்டுள்ளார்கள்.

அப்போதுதான் தங்கள் வீட்டிலிருந்த நகை, பணம் அனைத்தும் கொள்ளை போன விடயமே அவர்களுக்குத் தெரியவந்துள்ளது.

ரச்னா தன் வீடு எப்படி உள்ளது, வாசல் எங்கே, பணம் நகைகள் எவ்வளவு உள்ளது என எல்லாவற்றையும் தெளிவாக வீடியோக்களில் விளக்க, அதையே பயன்படுத்தி வீட்டுக்குள் நுழைந்த கொள்ளையர்கள் பணம், நகை அனைத்தையும் கொள்ளையடித்துச் சென்றுவிட்டார்கள்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள பொலிசார், கொள்ளையர்களைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுவருகிறார்கள்.