9
14 வயதுடைய தனது மகளைத் தொடர்ச்சியாகக் கடித்து, கொடூரமாகத் துன்புறுத்தித் தாக்கி வந்த குற்றச்சாட்டில், குறித்த சிறுமியின் தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.
தாக்குதலுக்கு உள்ளாகித் துன்புறுத்தப்பட்டதாகக் கூறப்படும் சிறுமி, ஹொரண மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னரே இந்தச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பாதிக்கப்பட சிறுமி தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன், அவரைப் பரிசோதித்து மருத்துவ அறிக்கையைப் பெற்றுக்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சிறுமியின் உடலில் காணப்பட்ட காயங்கள் மற்றும் அவர் வழங்கிய தகவல்களின் அடிப்படையில், இது குறித்து உரிய அதிகாரிகளுக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
தாய் தனது மகளை நீண்ட காலமாகத் தொடர்ந்து தாக்கி வந்துள்ளதும், சிறுமியின் உடலில் கடித்த காயங்களை ஏற்படுத்திக் கொடூரமாக நடந்து கொண்டதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்தத் துன்புறுத்தல்கள் காரணமாக, அச்சிறுமி கடுமையான மன உளைச்சலுக்கும், குழப்பமான மனநிலைக்கும் தள்ளப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன. மேலும் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





