TIN இலக்கத்தை பெறாத 40 இலட்சம் பேருக்கு முக்கிய அறிவிப்பு!!

179

வரி செலுத்துவோர் அடையாள இலக்கம் (TIN) பெற வேண்டியவர்களில் சுமார் 40 இலட்சம் பேர் இதுவரை அதனைப் பெற்றுக்கொள்ளவில்லை என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தற்போது வரை 13 மில்லியனுக்கும் அதிகமானோர் TIN இலக்கத்தைப் பெற்றுள்ளதாகவும், 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து குடிமக்களும் கட்டாயமாக TIN இலக்கம் பெற்றிருக்க வேண்டும்.

நாட்டில் சுமார் 17 மில்லியன் பேர் இந்த இலக்கத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டிய நிலை காணப்படுவதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், 2026ஆம் ஆண்டின் 11ஆம் இலக்க உள்நாட்டு இறைவரி (திருத்த) சட்டத்தின் கீழ் பல்வேறு சேவைகள் மற்றும் பரிவர்த்தனைகளுக்கு TIN இலக்கம் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வங்கிக் கணக்குகள் ஆரம்பித்தல், மோட்டார் வாகனங்களைப் பதிவு செய்தல் மற்றும் புதுப்பித்தல், வணிகப் பதிவுகள் மேற்கொள்ளல், நிறுவனப் பங்குகளை மாற்றம் செய்தல் மற்றும் கடன் அட்டைகள் பெறுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு TIN இலக்கம் அவசியமாக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நடைமுறையில் உள்ள சட்ட ஏற்பாடுகளின் படி TIN இலக்கம் இனி இரகசியத் தகவலாகக் கருதப்படாது என்றும் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.