வவுனியாவில் தாதியர் கல்லூரியில் குழப்ப நிலை : சான்றிதழ் வழங்காமல் இழுத்தடிப்பதாக மாணவர்கள் குற்றச்சாட்டு!!

32

வவுனியா வைரவபுளியங்குளத்தில் அமைந்துள்ள தனியார் தாதியர் கல்லூரியில் இன்று (15.06.2026) குழப்பநிலை ஒன்று ஏற்ப்பட்டமையால் பொலிசார் வரவழைக்கப்பட்டனர். சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

குறித்த தனியார் தாதியர் கல்லூரியில் தாதிய கற்கைநெறிகளை பயில்வதற்காக மாணவர்களிடம் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்காக ஒவ்வொரு மாணவர்களிடம் இருந்தும் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான பணம் பகுதி பகுதியாக அறவிடப்பட்டதாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

பதிவுகள் மேற்கொள்ளும் போது கற்கை நெறி முடிவில் அங்கிகாரமுள்ள சான்றிதழான TVEC வழங்கப்படும் என கல்லூரி நிர்வாகிகளால் மாணவர்களுக்கு கூறப்பட்டுள்ளது.

எனினும் கற்கை நெறிமுடிவடைந்து நீண்ட நாட்களாகியும் அந்த சான்றிதழ் வழங்கப்படவில்லை என மாணவர்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.

இதனையடுத்து கல்லூரியின் நிர்வாகிகளுக்கும் மாணவர்களுக்கும் இடையில் இன்று குறித்த வளாகத்தில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இதன்போது உடனடியாக எமக்கு சான்றிதழ் வழங்கப்படவேண்டும் இல்லாவிடில் நாம் செலுத்திய பணத்தை திரும்ப செலுத்துமாறு மாணவர்கள் தரப்பில் கோரப்பட்டுள்ளது. அதற்கு பொறுப்பான பதிலை கல்லூரி நிர்வாகிகள் வழங்கவில்லை. இதனால் அங்கு குழப்பநிலை ஏற்ப்பட்டது.

இதனையடுத்து மாணவர்களால் பொலிசாருக்கு முறைப்பாடு வழங்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா பொலிசார் கல்லூரிநிர்வாகிகள் எனக்கூறப்படும் ஐவரை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்றனர். மேலதிக விசாரணைக்களுக்காக பாதிக்கப்பட்ட மாணவர்களும் பொலிஸ் நிலையத்திற்கு சென்றிருந்தனர்.

இது தொடர்பான விசாரணைகளை வவுனியா பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.