பிரித்தானியாவில் இருந்து நாடுகடத்தப்படவுள்ள இலங்கைக் குடும்பம் : ஏற்பட்டுள்ள திடீர் திருப்பம்!!

35

ஐக்கிய ராச்சியத்தில் தொழில் ரீதியாகவும் தன்னார்வ அடிப்படையிலும் பெரிய அளவிலான சமூக சேவையில் ஈடுபட்டுள்ள ஒரு இலங்கை குடும்பத்தை நாடு கடத்துவதற்கான அந்நாட்டு உள்துறை அமைச்சின் முடிவு, பிரித்தானிய நாடாளுமன்றத்தில் கடும் எதிர்ப்பைச் சந்தித்துள்ளது.

பிரித்தானிய மக்கள் பிரதிநிதிகள் சபை (House of Commons) ஹவுஸ் ஆஃப் காமன்ஸில் பேசிய லிபரல் ஜனநாயகக் கட்சியின் எம்.பி. விக்டோரியா கொலின்ஸ்,

குறித்த இலங்கை குடும்பம் எதிர்கொள்ளும் நெருக்கடியிலிருந்து அவர்களை மீட்க பிரித்தானிய அரசாங்கம் உடனடியாகத் தலையிட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

உள்ளூர் சமூகத்திற்கு மிகவும் மதிப்புமிக்க சேவையை ஆற்றிவரும் இவர்களை நாடு கடத்துவது முற்றிலும் அநியாயமானது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

நாடு கடத்தலை எதிர்கொள்ளும் அந்தக் குடும்பத்தினர் ரசிக சமரசிங்க, அவரது மனைவி சமிலா தில்ருக்ஷி (45), மற்றும் அவர்களது மூன்று சிறு குழந்தைகள் ஆவர். இவர்கள் அனைத்து சட்ட நடைமுறைகளையும் பின்பற்றி கடந்த நான்கு ஆண்டுகளாக பிரித்தானியாவில் வசித்து வருகின்றனர்.

ரசிக ஒரு பராமரிப்புப் பணியாளராகவும், சமிலா நோர்த்சர்ச் பகுதியில் சிறப்புத் தேவைகள் கொண்ட குழந்தைகளுக்கு ஆதரவளிக்கும் ஒரு துணை ஆசிரியராகவும், உள்ளூர் தேவாலயத்தில் ஒரு தன்னார்வலராகவும் பணியாற்றி வருகின்றனர்.

புதிய விசா விதிமுறைகளின் கீழ் சட்டப்பூர்வமாக வசித்து வந்த தாயும் மூன்று குழந்தைகளும், 14 நாட்களுக்குள் இங்கிலாந்தை விட்டு வெளியேறுமாறு உள்துறை அமைச்சினால் திடீரென உத்தரவிடப்பட்டுள்ளனர்.

தந்தை மட்டுமே தங்குவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதால், அவர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

அதிகாரிகளின் இந்த முடிவு அப்பகுதியில் வசிக்கும் பிரித்தானிய மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதுடன், அவர்கள் ஏற்கனவே அந்த இலங்கை குடும்பத்திற்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் கொலின்ஸ் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இந்தத் தம்பதியினர் உள்ளூர் மக்களால் முன்களப் பணியாளர்களாகவும், சமூகத்தின் வலுவான தூண்களாகவும் மதிக்கப்படுகிறார்கள். மேலும்,அவர்களின் கருணையும் அர்ப்பணிப்பும் ஒட்டுமொத்த சமூகத்தாலும் பாராட்டப்படுகிறது.

குழந்தைகளை அவர்களின் தந்தையரிடமிருந்து பிரிப்பது, அவர்கள் மீது கடுமையான உளவியல் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால், மனிதாபிமான அடிப்படையில் இந்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு அந்தக் குடும்பம் பிரித்தானிய அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்துள்ளது.

இந்தப் பிரச்சினைக்கு உடனடி நடவடிக்கையும் சாதகமான தீர்வையும் கோரி, குடிவரவுத்துறை அமைச்சருக்கு அதிகாரப்பூர்வமாக கடிதம் எழுதியுள்ளதாக விக்டோரியா கொலின்ஸ் கூறியுள்ளார்.

இதேபோன்ற சிரமங்களை எதிர்கொள்ளும் மற்ற குடும்பங்களுக்கும் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

அவரைத் தொடர்ந்து உரையாற்றிய பிரிட்டிஷ் பாராளுமன்றத்தின் பிரதி சபாநாயகர் கரோலின் நோக்ஸ், நாடாளுமன்ற உறுப்பினரின் கவலைகளைத் தாம் புரிந்துகொண்டதாகவும், ஆனால் இது சபாநாயகர் அலுவலகத்தின் மூலம் நேரடியாகத் தீர்க்கக்கூடிய ஒரு பிரச்சினை அல்ல என்றும் கூறினார்.

அதன்படி, இந்த இலங்கை குடும்பத்திற்காகத் தொடர்ந்து குரல் கொடுக்க எடுக்கக்கூடிய மாற்று நாடாளுமன்ற நடவடிக்கைகளை ஆராய்வதற்காக, அவை அலுவலகத்துடன் (Table Office) இணைந்து செயல்படுமாறு பிரதி சபாநாயகர் விக்டோரிய கொலின்ஸ் எம்.பி.க்கு அறிவுறுத்தியுள்ளார்.