சாதி மறுத்து திருமணம் : காவல் நிலையத்திலேயே மகளை கொன்ற தந்தை!!

268

உத்தரப் பிரதேச மாநிலத்தில் சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்ட 19 வயது இளம்பெண் ஒருவர், பாதுகாப்பு கேட்டு வந்த காவல் நிலையத்திற்குள்ளேயே அவரது பெற்ற தந்தையால் கத்தியால் குத்திக் படுகொலை செய்யப்பட்ட நடுக்கத்தை ஏற்படுத்தும் சம்பவம் அரங்கேறியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் பண்டா மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர், தனது குடும்பத்தாரின் எதிர்ப்பையும் மீறி மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரைக் காதலித்துச் சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டார்.

இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் வீட்டார், புதுமணத் தம்பதியருக்குத் தொடர்ந்து அச்சுறுத்தல் கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில், பண்டா மாவட்டத்தில் உள்ள படோசா காவல் நிலையத்திற்கு இருதரப்பினரும் வரவழைக்கப்பட்டனர்.

காவல் நிலைய வளாகத்திற்குள் இரு குடும்பத்தினரையும் முன்னிறுத்திக் காவல்துறையினர் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினர்.

காவல் துறையினர் நடத்திய இந்த பேச்சுவார்த்தையின் போது, அந்த இளம்பெண் தனது பெற்றோருடன் செல்ல மறுத்து, தான் காதலித்துத் திருமணம் செய்து கொண்ட கணவருடன் மட்டுமே வாழ்வேன் என்பதில் மிகவும் உறுதியாக இருந்துள்ளார்.

மகளின் இந்தத் தீர்க்கமான முடிவைக் கேட்டு ஆத்திரத்தின் எல்லைக்கே சென்ற அவரது தந்தை, காவல் துறையினர் கண் இமைக்கும் நேரத்திற்குள் தான் மறைத்து வைத்திருந்த கூர்மையான கத்தியை எடுத்து, சொந்த மகள் என்றும் பாராமல் அவரது உடலில் கொடூரமாகக் குத்தியுள்ளார்.

காவல் நிலையத்திற்குள்ளேயே ரத்த வெள்ளத்தில் சரிந்த அந்தப் பெண்ணை அங்கிருந்த போலீசார் மீட்டு, சிகிச்சைக்காக உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அங்குச் சிகிச்சை பலனின்றி அந்த இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

காவல் நிலையப் பாதுகாப்பு வளையத்திற்குள்ளேயே நிகழ்ந்த இந்த ஆணவக் கொலைச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில், கொலையாளி தந்தையைப் படோசா போலீசார் உடனடியாக அதிரடியாகக் கைது செய்தனர்.

மேலும், இச்சம்பவத்தின் போது காவல் நிலையத்தில் பாதுகாப்புக் குறைபாடுகள் இருந்தது குறித்து உயர் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.