வைபவ் சூர்யவன்ஷியுடன் வாக்குவாதம் : இலங்கை வீரரின் சமூகவலைத்தள பக்கம் முடக்கம்!!

105

இந்தியா ‘ஏ’ அணி வீரர் வைபவ் சூர்யவன்ஷியுடன் களத்தில் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து, இளம் வீரரான இலங்கை ‘ஏ’ கிரிக்கெட் வீரர் விஷன் ஹலம்பேஜ்வின் இன்ஸ்டாகிராம் கணக்கு முடக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இணையத்தள கேலிகளுக்கு இலக்காக மாறியதால், அவரது இன்ஸ்டாகிராம் கணக்கு முடக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நேற்றையதினம்(15) தம்புள்ளையில் நடைபெற்ற முத்தரப்புத் தொடரில், இந்தியா ‘ஏ’ அணிக்கு எதிரான இலங்கை ‘ஏ’ அணி வெற்றிப்பெற்றது. பரபரப்பான சூப்பர் ஓவர் வெற்றிக்குப் பிறகு, இலங்கை வீரர் விஷன் ஹலம்பேஜ் பரவலான கவனத்தை ஈர்த்தார்.

ஹலம்பேஜ்க்கும் வைபவ் சூர்யவன்ஷிக்கும் இடையே நடந்த காரசாரமான வாக்குவாதத்தின் காணொளிகள் சமூக ஊடகங்களில் பரவலாகப் பரவின.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, குறிப்பாக இந்தியாவைச் சேர்ந்த ஏராளமான சமூக ஊடகப் பயனர்கள், ஹலம்பேஜின் இன்ஸ்டாகிராம் கணக்கில் வசவுக் கருத்துக்களைப் பதிவிட்டனர்.

மேலும், அந்த வீரரின் குடும்ப உறுப்பினர்களும் இணையத்தில் துன்புறுத்தலுக்கு ஆளானதாகப் பல பயனர்கள் குறிப்பிட்டுள்ளனர். சர்வதேச கிரிக்கெட்டில் இதுபோன்ற இணைய கேலிகள் அதிகரித்து வருகின்றன.

பிரபல இந்திய கிரிக்கெட் வீரர்கள் சம்பந்தப்பட்ட சம்பவங்களுக்குப் பிறகு, எதிரணி வீரர்கள் சமூக ஊடகங்களில் அடிக்கடி இது போன்ற சம்பவங்களை எதிர்கொள்கின்றனர்.

அதனை தொடர்ந்து இன்றையதினம்(16), ஹாலம்பேஜின் இன்ஸ்டாகிராம் கணக்கை அணுக முடியவில்லை. ஏராளமான முறைபாடுகள் மற்றும் அறிக்கைகள் வந்ததைத் தொடர்ந்து அந்தக் கணக்கு முடக்கப்பட்டதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், கணக்கு செயலிழந்ததற்கான காரணத்தை இன்ஸ்டாகிராமோ அல்லது அந்த வீரரோ அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.

களத்தில் ஏற்படும் மோதல்களைத் தொடர்ந்து, இளம் விளையாட்டு வீரர்கள் இணையவழித் துன்புறுத்தல்களுக்கு இலக்காகின்றனர் என்பதை மீண்டும் இந்த சம்பவம் எடுத்துகாட்டியுள்ளது.