இளம் பெண் மர்மமான முறையில் மரணம் : கணவனின் மோசமான செயல்!!

13

கண்டி, குண்டசாலையில் வசித்து வந்த 23 வயதுடைய திருமணமான இளம் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று அதிகாலை 2 மணியளவில் அவரது படுக்கையறையில் இருந்து சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த பெண்ணை அவரது கணவர் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் தாக்கி கொலை செய்துள்ளதாக அவரது உறவினர்களால் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

எனினும் தான் இசை நிகழ்ச்சி ஒன்றைப் பார்ப்பதற்காக சென்றுவிட்டு இன்று அதிகாலை வீட்டிற்கு வந்தபோது, மனைவி தூக்கில் தொங்குவதைக் கண்டதாகவும், பின்னர் கயிற்றை அறுத்து அவரது உடலைக் கட்டிலில் வைத்ததாகவும் கணவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த இருவரும் திருமணமாகி சுமார் இரண்டு வருடங்களாகியுள்ளது. இந்தநிலையில், போதைப்பொருளுக்கு அடிமையான கணவனால் தனக்கு மேற்கொள்ளப்படும் சித்திரவதைகள் மற்றும் அச்சுறுத்தல்கள் தொடர்பாக பலகொல்ல பொலிஸ் நிலையத்தில் பல முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

கணவர் அடிக்கடி தன்னைத் தாக்குவதால், அடிக்கடி தனது சொந்த வீட்டிற்கு சென்று விடுவதாக தெரியவந்துள்ளது.

பின்னர் மீண்டும் கணவரின் வீட்டிற்குச் செல்வதாகவும், அவரிடமிருந்து விவாகரத்துப் பெறுவதற்கு அவர் தயாராகி வந்ததாகவும் உறவினர்கள் மேலும் தெரிவித்தனர்.

இதேவேளை, உயிரிழந்த பெண்ணால் எழுதப்பட்டதாக கூறப்படும் கடிதம் ஒன்றை கணவரின் குடும்பத்தினர் பொலிஸாருக்கும் நீதவானுக்கும் சமர்ப்பித்துள்ளனர்.

எனினும், அந்தக் கடிதத்தில் உள்ள கையெழுத்து தங்களுடைய இறந்து போன மகளுடையது அல்ல என பெண்ணின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

விசாரணையின் போது பெண்ணின் தரப்பை சேர்ந்தவர்கள் பதற்றத்துடன் நடந்து கொண்டமையால் அந்த இடத்தில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

பின்னர், பெண்ணின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக கண்டி தேசிய வைத்தியசாலைக்கு அனுப்புமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். பொலிஸார் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.