இளம்பெண் மர்ம மரணம் : அறையில் சிக்கிய கடிதம் – பிரேத பரிசோதனைக்காக காத்திருக்கும் பெற்றோர்!!

22

கண்டி, குண்டசாலை – வராபிட்டிய பகுதியில் வீடொன்றிலிருந்து திருமணமான 23 வயதுடைய இளம் பெண் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பலகொல்ல பொலிஸார் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இளம் பெண்ணின் மரணம் கொலையா அல்லது தூக்கிட்டுத்தற்கொலை செய்துகொண்டாரா என்பது குறித்து பொலிஸ் பல விசாரணைகளை நடத்தி வருகின்றது.

கண்டி தேசிய வைத்தியசாலையில் நடத்தப்படவுள்ள பிரேத பரிசோதனை இதனை வெளிப்படுத்தும் என்று பொலிஸ் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் நேற்று (21) தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த பெண்ணின் கணவருடைய வீட்டில் இருந்தே இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. எனினும், தனது மகள் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

“என் மகளின் மரணம் சந்தேகத்திற்குரியதாக உள்ளது. இந்த சம்பவம் நடந்தபோது, ​​அவளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டிருந்த ஆணின் தாயும் தந்தையும் வீட்டில் இருந்தனர். என் குழந்தைக்கு என்ன நேர்ந்தது?” என்று தெரியவில்லையென இறந்த பெண்ணின் தாய் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

இறந்த பெண்ணின் கணவர், தான் ஒரு இசை நிகழ்ச்சிக்குச் சென்றுவிட்டு, முந்தைய நாள் (20ஆம் திகதி) அதிகாலையில் வீடு திரும்பியபோது, ​​அவள் தூக்கில் தொங்குவதைக் கண்டதாகவும், பின்னர் கயிற்றை அறுத்து அவளது உடலைக் கட்டிலில் போட்டதாகவும் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

திருமணமாகி கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் ஆகிய நிலையில், போதைக்கு அடிமையான தனது கணவரின் தொடர்ச்சியான துன்புறுத்தல் குறித்து, இறந்த பெண் பலமுறை பொலிஸில் முறைப்பாடு அளித்திருந்ததாக அவரது உறவினர்கள் கூறுகின்றனர்.

கணவரின் தாக்குதல்களால் தொடர்ந்து தன் பெற்றோர் வீட்டிற்குச்சென்று வந்ததாகவும், இதன் காரணமாக விவாகரத்து பெறத்தயாராகி வந்ததாகவும் உறவினர்கள் கூறுகின்றனர்.

இதற்கிடையில், இறந்த பெண் எழுதியதாகக் கூறப்படும் ஒரு கடிதமும் அவரது கணவரின் குடும்பத்தினரால் பொலிஸாரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அந்த கடிதத்தில் உள்ள கையெழுத்து, இறந்த தங்கள் மகளுடையது அல்ல என்று அப்பெண்ணின் பெற்றோர் கூறுகின்றனர்.​​

இறந்த பெண்ணின் உறவினர்களை சடலம் கண்டெடுக்கப்பட்ட இடத்திற்குச் செல்ல அனுமதிக்கப்படாததால், சம்பவ இடத்தில் பதற்றமான சூழல் நிலவியிருந்தது.

இச்சம்பவம் குறித்து பலகொல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.