வவுனியாவில் கோவில் திருவிழாவில் 55000 ரூபாவிற்கு ஏலம் போன குழந்தை!!

606

இலங்கையின் வன்னிப் பெருநிலப்பரப்பில் அமைந்துள்ள சிறப்புமிக்க ஆலயங்களில் வவுனியா சாஸ்திரிகூளாங்குளம், சின்னப்புதூர் அருள்மிகு ஸ்ரீ தான்தோன்றி நாகதம்பிரான் ஆலயமும் ஒன்றாகும்.

இந்த ஆலயத்தின் வருடாந்தப் பொங்கல் மற்றும் தீர்த்தத் திருவிழாவின் போது, பார்ப்போரை வியப்பிலாழ்த்தும் வகையில் பல நூற்றாண்டுகள் பழமையான ஒரு நேர்த்திக்கடன் சம்பிரதாயம் இன்றும் பக்திப் பரவசத்துடன் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.

ஆலயத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, தங்களுக்குக் குழந்தை வரம் வேண்டியோ அல்லது தங்கள் பிள்ளைகளின் தீராத நோய்கள், தோஷங்கள், மற்றும் கண்டங்கள் நீங்க வேண்டும் என்று நாகதம்பிரானிடம் வேண்டிக்கொண்ட பெற்றோர், தங்களது குழந்தைகளை ஆலயத்தில் ஒப்படைக்கின்றனர்.

இவ்வாறு நேர்த்திக்கடன் வைக்கப்பட்ட குழந்தைகள், ஆலய நிர்வாகத்தினரால் இறைவனின் சந்நிதானத்தில் முறைப்படி ‘ஏலம்’ விடப்படுகின்றனர். அந்த வகையில், இம்முறை நடைபெற்ற திருவிழாவில் ஒரு குழந்தை ஐம்பத்தி ஐயாயிரம் (55,000) ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டமை பக்தர்களிடையே பெரும் நெகிழ்ச்சியையும் வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆலய அர்ச்சகர்கள் மற்றும் நிர்வாகத்தினரால் ஏலம் விடப்படும்போது, அந்தக் குழந்தையின் பெற்றோருடைய நெருங்கிய உறவினர்கள் 55,000 ரூபாய் செலுத்தி அந்தக் குழந்தையை ஏலம் எடுக்கின்றனர். பின்னர், ஏலம் எடுத்த உறவினர்களிடம் இருந்து, பெற்றோர் தங்களது குழந்தையைத் தங்களுக்குரிய முறைப்படி முறைமைகளைச் செய்து, மீண்டும் தங்களுடைய பிள்ளையாகப் பெற்றுக் கொள்கின்றனர்.

ஏலத்தின் மூலம் பெறப்படும் இந்தத் தொகை, நேர்த்திக்கடன் கட்டணமாக ஆலயத்தின் திருப்பணிகளுக்காகவும், ஏழைப் பெண்களின் வாழ்வாதார உதவி மற்றும் திருமணக் கொடுப்பனவுகளுக்காகவும் ஆலய நிர்வாகத்தினரால் அறக்கட்டளை நிதியாகப் பயன்படுத்தப்படுவது இச்சம்பிரதாயத்தின் மற்றொரு சிறப்பம்சமாகும்.

குழந்தைகளை இவ்வாறு இறைவனுக்குத் தாரைவார்த்து, மீண்டும் ஏலம் மூலம் வாங்குவதன் மூலம் பிள்ளைகளுக்கு ஏற்படவிருக்கும் அத்தனை ஆயுள் தோஷங்களும், கிரகக் குறைபாடுகளும் நீங்கிவிடும்” என்பது இப்பகுதி மக்களின் ஆழமான நம்பிக்கையாகும்.

நவீன உலகம் எவ்வளவோ மாறினாலும், வன்னி மண்ணின் பாரம்பரிய ஆன்மீக விழுமியங்களையும், வினோத வழிபாட்டுச் சம்பிரதாயங்களையும் பறைசாற்றும் ஒரு நிகழ்வாக சின்னப்புதூர் நாகதம்பிரான் ஆலயத்தின் இந்த “குழந்தை ஏல நேர்த்திக்கடன்” இன்றும் ஆன்மீகப் பெருமிதத்துடன் தொடர்கிறது.