இளம் பெண் வைத்தியரின் மர்ம மரணம் : சந்தேகநபரின் பல மோசடிகள் அம்பலம்!!

15

புதிய இணைப்பு : தெல்தெனிய பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனமொன்றில் இருந்து வைத்தியர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பான பிரதான சந்தேகநபரின் மனைவி குறித்தும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சந்தேகநபரின் தேசிய அடையாள அட்டை எண்ணைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் பல மோசடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி மற்றும் திருமணம் தொடர்பான நிதி மோசடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் மற்றும் முறைப்பாடுகளுக்கு உள்ளாகியுள்ள சந்தேகநபரின் மனைவி குறித்தும் பல நிறுவனங்கள் மற்றும் பொலிஸ் நிலையங்கள் ஊடாக விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

முதலாம் இணைப்பு : கண்டி – தெல்தெனிய பகுதியில் கார் ஒன்றுக்குள் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட இளம் பெண் வைத்தியரின் மரணம் தொடர்பிலான பிரதான சந்தேகநபர் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த வாரம் 17 ஆம் திகதி அம்பாறை வைத்தியசாலையில் பணியாற்றிய பெண் பௌதீக சிகிச்சை நிபுணர் (பிசியோதெரபிஸ்ட்) 33 வயதான ஷம்யா தர்ஷனி என்ற பெண் வைத்தியர் காரொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

இதேவேளை, இந்த கொலையைச் செய்ததாக சந்தேகிக்கப்படும் பெண்ணின் காதலனை தேடுவதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளதுடன், இதுவரை சந்தேகநபர் தலைமறைவாகியுள்ளார்.

இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் சந்தேகநபர் தொடர்பான பல தகவல்களை விசாரணை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.

இந்த நிலையில் சந்தேகநபருடன் தொடர்புடையதாகக்கூறப்படும் பாரிய அளவிலான நிதி மோசடிகள் மற்றும் ஏனைய குற்றச்செயல்கள் அடங்கிய வலையமைப்பொன்றை நுவரெலியா பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.

நுவரெலியா தலைமையக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியினால், அதிகாரிகளுக்கு சமர்ப்பிக்கப்பட்ட விசேட விசாரணை அறிக்கையிலேயே இந்த விபரங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

சந்தேகநபர் ஹொரம்பாவ, கொஸ்கொல்ல பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர். இந்த மோசடி நடவடிக்கைகளில் அவரது மனைவிக்கும் நேரடித் தொடர்பு இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றன.

திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பெண்களை ஏமாற்றியமை, வெளிநாட்டு வேலைவாய்ப்பு வழங்குவதாகக் கூறி பணம் மோசடி செய்தமை மற்றும் வாகன இறக்குமதி தொடர்பான மோசடிகள் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ், சந்தேகநபருக்கு எதிராக நாடு முழுவதும் பல நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இதன்படி, திருமணம் செய்து கொள்வதாகக் கூறி 11,873,000 ரூபாய் மோசடி செய்தமை மற்றும் மோட்டார் வாகனமொன்றை சட்டவிரோதமாகப் பயன்படுத்தியமை தொடர்பில் கம்பஹா மேல் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.

கடந்த 2023 நவம்பரில் பேலியகொட பொலிஸாராலும் மோசடி விசாரணைப் பிரிவினராலும் அவர் கைது செய்யப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.