பரபரப்பை ஏற்படுத்தியுள்ள கொடூர கொலை : தூணுடன் கை – கால்கள் கட்டப்பட்டு மிதந்துவந்த சடலம்!!

60

காலி – ஜின் ஆற்றுப்பகுதியில் வக்வெல்ல பாலத்திற்கு அருகில் அடையாளம் தெரியாத நபரொருவரின் சடலம் மிதந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று மாலை (23.06.2026) பொது மக்கள் வழங்கிய தகவலுக்கமைய சடலம் பொலிஸ் அதிகாரிகள் மற்றும் உள்ளூர் மக்களால் மீட்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், இறந்தவரின் முகம் சிதைக்கப்பட்டிருந்ததும், அவரது கைகள் பின்புறம் கட்டப்பட்டிருந்ததும் தெரியவந்துள்ளது.

மேலும், குறித்த நபரின் கால்கள் கொன்கிரீட் தூணுடன் ஒன்றாக இறுக கட்டப்பட்டிருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. நீரில் மூழ்கடித்து கொல்வதற்காக, அவரது கால்களில் பெரிய கொன்கிரீட் தூண்கள் கட்டப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

நீர்மட்ட அதிகரிப்பினால் ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட சடலம், பின்னர் பொத்தல பொலிஸ் பிரிவில் உள்ள வக்வெல்ல பாலத்திற்கு அருகில் சிக்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சடலம் இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில், 40-50 வயதுக்குட்பட்ட ஆணின் சடலமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. இதற்கமைய, பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.