முச்சக்கர வண்டிக்கு தீவைத்து இளைஞன் எடுத்த விபரீத முடிவு : விசாரணையில் வெளியான தகவல்!!

18

கொழும்பு – பம்பலப்பிட்டி தொடருந்து நிலையத்திற்கு அருகில் முச்சக்கர வண்டிக்கு தீவைத்து விட்டு தவறான முடிவெடுத்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் நேற்று (23.06.2026) காலை சுமார் 9.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திடீரென தனது முச்சக்கர வண்டியை வீதியில் நிறுத்தி தீ வைத்து கொளுத்திய நிலையில், மாத்தறையிலிருந்து மருதானை நோக்கிச்சென்று கொண்டிருந்த ருஹுணு குமாரி தொடருந்தின் முன் குதித்து தவறான முடிவெடுத்திருந்தார்.

இதன்போது படுகாயமடைந்த முச்சக்கர வண்டி சாரதி கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். பதுரலிய, திக்கேனாவை சேர்ந்த 26 வயதான இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கொழும்பு மாநகர சபையை சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து, தீப்பற்றி எரிந்த முச்சக்கர வண்டியில் ஏற்பட்ட தீயை அணைத்துள்ளனர்.

இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் ஆவணங்களை ஆய்வு செய்ததில், இந்த முச்சக்கர வண்டி பதுரலியவை சேர்ந்த பெண் ஒருவருக்கு சொந்தமானது என்பதும் தெரியவந்துள்ளது.

இந்த நபர் முச்சக்கர வாகனத்திற்கு தீ வைத்து தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் வெளியாகாத நிலையில், விசாரணை நடைபெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.