யாழ்ப்பாணத்தில் இருந்து சென்ற பக்தர்கள் : தெய்வமாக வந்து நெகிழவைத்த நாய்!!

21

யாழ்ப்பாணத்தில் இருந்து கதிர்காமம் நோக்கிச் செல்லும் வருடாந்த பாதயாத்திரையில் தானாகவே முன்வந்து இணைந்து கொண்ட சுப்பிரமணியம் என்ற நாய் பலரதும் கவனத்தை ஈர்த்துள்ளது.

குறித்த நாய் 33 நாட்களாக பக்தர்களுடன் தொடர்ந்து பயணித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நாயை பார்ப்பதற்காக கதிர்காம வீதியின் இருபுறமும் கூடும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது.

அத்துடன் தற்போது சமூக ஊடகங்களிலும் இந்தச் செய்தி அனைவரினதும் கவனத்தை ஈர்த்துள்ளது.

முல்லைத்தீவு – முள்ளியவளைப் பகுதியை கடந்து சென்று கொண்டிருந்த போது, எந்தவொரு உரிமையாளரும் இல்லாத இந்த நாய், தங்களுடன் தானாகவே முன்வந்து யாத்திரையில் இணைந்ததாக பாதயாத்திரைக் குழுவின் தலைவர் ஜெயவேல் சுவாமி குறிப்பிட்டுள்ளார்.

இதனை கடவுளின் அற்புதமாகக் கருதி, பக்தர்கள் இந்த நாயின் கழுத்தில் சிறிய துணி ஒன்றைக் கட்டி, நெற்றியில் விபூதி மற்றும் குங்குமத் திலகமிட்டு சுப்பிரமணியம் என்ற பெயரால் அழைத்து வருகின்றனர்.

திருகோணமலை பகுதியில் இந்த நாய் சிறியளவில் நோய்வாய்ப்பட்ட போது, அதற்கு கால்நடை மருத்துவ சிகிச்சை அளிக்கவும் பக்தர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இயற்கையிலேயே மாமிச உண்ணியான விலங்காக இருந்த போதிலும், கடந்த 32 நாட்களாக இந்த நாய் பக்தர்கள் வழங்கும் பிஸ்கட், பால், பாண் மற்றும் சைவ உணவுகளை மட்டுமே உட்கொண்டு வருவது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

நாயின் நடத்தையும் பக்தி உணர்வும், கடினமான பாதயாத்திரையில் ஈடுபடும் ஏனைய பக்தர்களின் மனதிற்கும் உடலிற்கும் ஒரு சிறந்த ஆன்மீக சக்தியையும் ஊக்கத்தையும் அளிப்பதாக பக்தர்கள் தெரிவித்துள்ளனர்.