இலங்கையை உலுக்கிய பெண்ணின் படுகொலை : நள்ளிரவில் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்ட சந்தேக நபர்!!

127

தெல்தெனிய பிரதேசத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட இளம்பெண் மருத்துவ நிபுணரின் படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் நள்ளிரவு வேளையில் நுவரெலிய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

நே்றறு(24) யாழ்ப்பாணத்தில் மோசடித் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட முக்கிய சந்தேக நபர், அவரது மனைவி மற்றும் குழந்தைகள் ஆகியோர்,

கொலை தொடர்பான மேலதிக விசாரணைக்காக இரவு மோசடித் தடுப்புப் பிரிவினரால் நுவரெலியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் மாறுவேடமிட்டு வெள்ளவத்தையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு ஒரு தனியார் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தபோது புதன்கிழமை (24) அதிகாலையில் சாவகச்சேரி கைதடி பகுதியில், மோசடித் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

இதற்கிடையே சந்தேக நபருக்கு அடைக்கலம் கொடுத்தவரும், அவரது நண்பருமான குண்டசாலை பிரதேச சபையைச் சேர்ந்த சாரதி ஒருவர், நுவரெலியா பொலிஸாரின் விசேட பிரிவினரால் குண்டசாலை பகுதியில் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களும் இன்று வியாழக்கிழமை (25) நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார்கள் என்றும், தடுப்புக்காவல் உத்தரவுகள் பெறப்பட்டு,

கொலை தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்றும் நுவரெலியா பிரதேச உதவி பொலிஸ் அத்தியட்சகர் சந்தன பஸ்நாயக்க தெரிவித்துள்ளார்.

சந்தேக நபர் நுவரெலியா பொலிஸ் நிலையம் கொண்டுவரப்பட்டபோது, ​​படுகொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் குடும்ப உறவினர்கள் குழுவும் அங்கு வருகை தந்திருந்தது.

சடலத்தைக் கொண்டு செல்லப் பயன்படுத்தப்பட்ட காரும், சந்தேக நபரை ஏற்றிச் செல்லப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.