தாய், தந்தை, தங்கையைக் கொன்றுவிட்டு தப்பிய பெண் கைது : காதலனுக்கு வலைவீச்சு!!

398

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஆடம்பர வாழ்க்கை மற்றும் சொத்துக்காகத் தனது தாய், தந்தை மற்றும் தங்கையைக் காதலனுடன் சேர்ந்து கத்தியால் குத்திக் கொடூரமாகக் கொலை செய்து விட்டுத் தப்பியோடிய மூத்த மகள் ஸ்வேதா (25) புதுச்சேரியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவாக உள்ள அவரது காதலனைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட சோமசுந்தர் (52), இவரது மனைவி முத்துலட்சுமி (48) ஆகியோர் தங்களது மகள்கள் ஸ்வேதா (25) மற்றும் சுப்ரியா ( 20) ஆகியோருடன் கிழக்கு பெங்களூருவின் சீகேஹள்ளி பகுதியில் உள்ள தம்னிகா லேஅவுட், ‘சாய் கிரீன்’ அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தனர்.

கடந்த ஜூன் 23ம் தேதியன்று சோமசுந்தர், முத்துலட்சுமி மற்றும் இளைய மகள் சுப்ரியா ஆகிய மூவரும் வீட்டில் கத்தியால் குத்தப்பட்டுக் கொடூரமான முறையில் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டனர். இது குறித்துக் கே.ஆர்.புரம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.

தலைமறைவாக இருந்த மூத்த மகள் ஸ்வேதா மீது போலீசாருக்குச் சந்தேகம் ஏற்பட்டு நடத்திய முதற்கட்ட விசாரணையில், சொத்து மற்றும் ஆடம்பர ஆசைக்காகக் காதலனுடன் சேர்ந்து அவரே இந்த மூன்று கொலைகளையும் அரங்கேற்றியது அம்பலமானது.

ஸ்வேதா பெங்களூருவில் வேலை செய்தபோது, கென்னத் என்ற வாலிபரைக் காதலித்துள்ளார். கென்னத் வேறு மதத்தைச் சேர்ந்தவர் என்பதால் ஸ்வேதாவின் பெற்றோர் இவர்களின் காதலுக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதனால் இரண்டு மாதங்களுக்கு முன்பே ஸ்வேதா வீட்டை விட்டு வெளியேறி, காதலனுடன் தனியாக வசித்து வந்துள்ளார்.

காதலனுடன் ஆடம்பரமாக வாழ நினைத்த ஸ்வேதா, தனது பெற்றோரின் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி ரகசியமாகச் சுமார் 30 லட்சம் ரூபாய் வரை கடன் வாங்கியுள்ளார். இந்தக் கடனைத் திருப்பிச் செலுத்தாததால், வங்கி நோட்டீஸ் சோமசுந்தரின் வீட்டுக்குச் சென்றுள்ளது.

இது குறித்து பெற்றோர் ஸ்வேதாவைக் கண்டித்தபோது, ஆத்திரமடைந்த அவர் தனது கடனை அடைக்கச் சொத்தில் பங்கு கேட்டுள்ளார். பெற்றோர் தர மறுக்கவே, அவர்களைக் கொன்று விட்டால் மொத்தச் சொத்தும் தனக்கே கிடைக்கும் என ஸ்வேதாவும் கென்னத்தும் திட்டமிட்டுள்ளனர்.

சதித்திட்டத்தின்படி, கடந்த ஜூன் 23 அன்று நள்ளிரவில் வீட்டிற்குச் சென்ற ஸ்வேதாவும் அவரது காதலன் கென்னத்தும் இணைந்து பெற்றோர் மற்றும் தங்கை சுப்ரியாவைக் கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டுத் தப்பியோடினர்.

இவர்களைப் பிடிக்கப் பெங்களூரு போலீசார் தனிப்படைகள் அமைத்துத் தேடி வந்த நிலையில், நேற்று இரவு புதுச்சேரியில் மறைந்திருந்த ஸ்வேதாவைப் போலீசார் மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர்.

கொலைக்கு முழுமையாக உதவியாக இருந்த அவரது காதலன் கென்னத் இன்னும் சிக்காததால், அவரைப் பிடிக்கத் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. காதலன் பிடிபட்ட பிறகே கொலையின் முழு பின்னணியும் முழுமையாகத் தெரியவரும் எனப் போலீசார் தெரிவித்துள்ளனர்.